search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஊரடங்கு காரணமாக விற்பனையாகாமல் தேங்கிய ரோஜா பூக்களை உலர வைக்கும் பணி நடந்த காட்சி.
    X
    ஊரடங்கு காரணமாக விற்பனையாகாமல் தேங்கிய ரோஜா பூக்களை உலர வைக்கும் பணி நடந்த காட்சி.

    பூக்கள் விற்பனை சரிவால் விலை வீழ்ச்சி- வாசனை திரவியத்துக்கு தயாராகும் ரோஜாக்கள்

    கொரோனாவால் திருவிழாவுக்கு தடை, திருமணத்துக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டதால் திண்டுக்கல்லில் பூக்கள் விற்பனை சரிந்து விலை வீழ்ச்சி அடைந்தது. வாசனை திரவியத்துக்கு ரோஜாக்கள் அனுப்பப்படுகின்றன.
    திண்டுக்கல்:

    திண்டுக்கல் அருகே உள்ள சின்னாளப்பட்டி, பெருமாள்கோவில்பட்டி, ஏ.வெள்ளோடு உள்பட சுற்றுவட்டார கிராமங்களில் பூக்கள் அதிகமாக சாகுபடி செய்யப்படுகின்றன. இங்கு பயிரிடப்படும் பூக்கள், திண்டுக்கல் பூ மார்க்கெட்டில் விற்கப்படுகிறது. இங்கு தினமும் 10 டன் அளவுக்கு பூக்கள் விற்பனையாகும். மேலும் திருமணம், திருவிழா காலங்களில் 20 டன் அளவுக்கு பூக்கள் விற்கப்படும்.

    திண்டுக்கல்லில் இருந்து தமிழகத்தில் பல்வேறு பகுதிகள் மட்டுமின்றி கேரளாவுக்கும் பூக்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இதனால் பூ விவசாயிகள் மற்றும் வியாபாரிகளுக்கு சீசன் காலத்தில் ஓரளவு லாபம் கிடைத்தது. இந்த நிலையில் கொரோனா பரவல் காரணமாக கோவில்களில் திருவிழா நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதோடு கோவில்களில் பக்தர்களுக்கும் அனுமதி இல்லை. மேலும் திருமணத்தையும் எளிமையாக நடத்தும் நிலை உள்ளது. இதனால் பூக்கள் விற்பனை குறைந்தது

    இதற்கிடையே கடந்த 10-ந்தேதி முதல் முழு ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. இதனால் பூக்கள் விற்பனை கடுமையான சரிவை சந்தித்துள்ளது. இந்த நிலையில் அதிகாலை 5 மணி முதல் மாலை வரை மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழியும் பூ மார்க்கெட் நேற்று வெறிச்சோடி காணப்பட்டது. இதனால் பூக்கள் விற்பனை குறைந்து, விலையும் கடுமையாக வீழ்ச்சி அடைந்தது.

    அதன்படி கடந்த 2 வாரங்களுக்கு முன்பு கிலோ ரூ.300-க்கு விற்ற மல்லிகைபூ நேற்று ரூ.70-க்கு விற்றது. அதேபோல் முல்லை பூ ரூ.30-க்கும், கனகாம்பரம் ரூ.100-க்கும், ரோஜா ரூ.15-க்கும், கோழி கொண்டை ரூ.7-க்கும், சம்பங்கி ரூ.5-க்கும், அரளி ரூ.10-க்கும், செவ்வந்தி ரூ.30-க்கும் விற்பனை ஆனது.

    இதற்கிடையே தினமும் டன் கணக்கில் பூக்கள் விற்பனையாகாமல் தேங்கி குப்பையில் கொட்டப்படுகின்றன. பொதுவாக சீசன் சமயங்களில் அதிக அளவில் விற்பனைக்கு வரும் பூக்களை வாசனை திரவியம் தயாரிக்க வியாபாரிகள் அனுப்பி வைப்பார்கள். ஆனால் கொரோனா பரவல் தொற்று காரணமாக விற்பனையாகாமல் தேங்கிய ரோஜா, மல்லிகை, மரிக்கொழுந்து போன்றவைகளை வாசனை திரவியம் தயாரிக்க அனுப்பி வைக்கும் நிலை தற்போது உருவாகி உள்ளது.

    இதையொட்டி திண்டுக்கல் பூமார்க்கெட்டில் விற்பனை ஆகாமல் தேங்கிய ரோஜா மலர்கள், அரசு மருத்துவமனை அருகே சாலையோரத்தில் உலர வைக்கப்படுகின்றன. அதன் பிறகு காய்ந்த அந்த ரோஜா மலர்கள் வாசனை திரவியம் தயாரிக்க அனுப்பி வைக்கப்படுகிறது. கொரோனா பரவல் எப்போது குறையும்? பூ விற்பனை எப்போது அதிகரிக்கும்? என்பது தெரியாததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
    Next Story
    ×