search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நூல் மில்லுக்கு அதிகாரிகள் ‘சீல்’ வைத்தபோது எடுத்தபடம்.
    X
    நூல் மில்லுக்கு அதிகாரிகள் ‘சீல்’ வைத்தபோது எடுத்தபடம்.

    கொரோனா விதிமுறைகளை கடைபிடிக்காத நூல் மில்லுக்கு சீல்

    வெள்ளகோவில் அருகே கொரோனா விதிமுறைகளை மீறிய நூல்மில்லுக்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். 2 பனியன் நிறுவனங்கள் பூட்டி சீல் வைக்கப்பட்டது.
    வெள்ளகோவில்:

    கொரோனா வைரஸ் தொற்றை கட்டுக்குள் கொண்டு வர அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி கொரோனா விதிமுறைகளை அனைவரும் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று அரசு அறிவுறுத்தி வருகிறது. ஆனாலும் பல்வேறு நிறுவனங்கள் கொரோனா விதிமுறைகளை கடைபிடிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    திருப்பூர் வெள்ளகோவில் ஒன்றியம் சேனாபதி பாளையம் கிராமம் இலுப்பைகிணறில் ஜெய்மாருதி என்ற பெயரில் தனியாருக்கு சொந்தமான ஒரு நூல் மில் உள்ளது. இந்த நூல் மில்லில் வேலை செய்யும் 64 ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது அவர்களில் 27 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்துள்ளது.

    இந்த மில் நிர்வாகம் கொரோனா விதிமுறையை பின்பற்றவில்லை என தெரியவந்தது. இதனால் திருப்பூர் மாவட்ட நிர்வாக உத்தரவின்பேரில் காங்கேயம் தாசில்தார் சிவகாமி, மண்டல துணை தாசில்தார் மாறன் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் தினேஷ் ஆகியோர் நூல் மில்லுக்கு வந்து தேதி குறிப்பிடப்படாமல் மில்லுக்கு ‘சீல்’ வைத்தனர்.

    திருப்பூர் மாநகராட்சி ஆணையர் சிவகுமார் உத்தரவின்பேரில் மாநகர் நல அதிகாரி பிரதீப் வாசுதேவன் கிருஷ்ணகுமார் தலைமையில் சுகாதார அதிகாரிகள் முருகன், ராஜேந்திரன் கொண்ட குழுவினர் ஆசர் நகர் பகுதியில் உள்ள பனியன் ஏற்றுமதி நிறுவனத்தில் தொழிலாளர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டனர்.

    148 பேருக்கு சளி மாதிரி எடுக்கப்பட்டது. இதில் 19 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து அந்த பனியன் ஏற்றுமதி நிறுவனத்துக்கு நேற்று மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்து கிருமி நாசினி தெளித்தனர்.

    அந்த பனியன் நிறுவனம் உள்ள பகுதிகளில் மருத்துவ முகாம் நடத்தி பொதுமக்களுக்கு காய்ச்சல் பரிசோதனை மற்றும் கொரோனா தடுப்பு வழிகளை மேற்கொண்டனர்.

    இதுபோல் ஒவ்வொரு மண்டலத்திற்கும் ஒரு பரிசோதனை வாகனம் மூலமாக ஏற்றுமதி நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு சளிப் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. மூன்று தொழிலாளர்களுக்கும் மேல் கொரோனா தொற்று ஏற்பட்டிருந்தால் அந்த நிறுவனங்களை பூட்டி சீல் வைக்க அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.

    இதுபோல் திருப்பூர் ஆண்டிபாளையத்தில் உள்ள ஒரு பனியன் ஏற்றுமதி நிறுவனத்தில் மாநகராட்சி சுகாதார பிரிவு அதிகாரிகள் தொழிலாளர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டனர். இதில் 350 தொழிலாளர்களுக்கு பரிசோதனை மேற்கொண்டதில் 32 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது.

    இதைத்தொடர்ந்து அந்த நிறுவனத்தை பூட்டி ‘சீல்’ வைத்து கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. மேலும் அந்த பகுதி கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு சுற்றுப்புற பகுதியில் உள்ள குடியிருப்புப் பகுதிகளிலும் மருத்துவ முகாம்கள் நடத்தி கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.
    Next Story
    ×