search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்காலிக சபாநாயகர் கு.பிச்சாண்டி, செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ஆகியோர் ஆய்வு செய்தபோது
    X
    தற்காலிக சபாநாயகர் கு.பிச்சாண்டி, செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ஆகியோர் ஆய்வு செய்தபோது

    சென்னை கலைவாணர் அரங்கத்தில் சட்டசபை கூட்டத்துக்கு ஏற்பாடு - புதிய எம்.எல்.ஏ.க்கள் இன்று பதவி ஏற்பு

    தமிழக சட்டசபை முதல் கூட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) கலைவாணர் அரங்கில் நடக்கிறது. இந்த கூட்டத்தில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்றுக்கொள்கின்றனர்.
    சென்னை:

    தமிழக சட்டசபை தேர்தலில் தி.மு.க. அமோகமாக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. முதல்-அமைச்சராக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கடந்த 7-ந்தேதி கவர்னர் மாளிகையில் பதவியேற்றார்.

    தமிழக சட்டசபை முதல் கூட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) கலைவாணர் அரங்கில் நடக்கிறது. இந்த கூட்டத்தில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்றுக்கொள்கின்றனர்.

    அவர்கள் பதவியேற்றுக்கொள்வதற்கு வசதியாக தற்காலிக சபாநாயகராக தி.மு.க.வை சேர்ந்த கீழ்ப்பெண்ணாத்தூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் கு.பிச்சாண்டியை கவர்னர் பன்வாரிலால் புரோகித் நியமித்துள்ளார்.

    இதன்படி, சட்டசபை தற்காலிக சபாநாயகராக, கவர்னர் முன்னிலையில் கு.பிச்சாண்டி நேற்று பதவியேற்றுக்கொண்டார். இந்த விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், தலைமை செயலாளர் வெ.இறையன்பு மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

    தமிழ்நாடு அரசு

    இன்று (செவ்வாய்க்கிழமை) நடக்கும் சட்டசபை கூட்டத்தில் கு.பிச்சாண்டி முன்னிலையில் புதிய எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்று கொள்கின்றனர். நாளை (புதன்கிழமை) சபாநாயகர், துணை சபாநாயகர் தேர்ந்தெடுக்கப்படவுள்ளனர்.

    சென்னை தலைமைச்செயலகத்தில் தற்காலிக சபாநாயகர் கு.பிச்சாண்டி அளித்த பேட்டி வருமாறு:-

    16-வது சட்டமன்ற கூட்டத்தொடரில் தற்காலிக சபாநாயகராக, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் பரிந்துரையின்படி எனக்கு கவர்னர் பதவி பிரமாணம் செய்து வைத்தார். அனைத்து எம்.எல்.ஏ.க்களுக்கும் இன்று (செவ்வாய்க்கிழமை) பதவி பிரமாணம் செய்யும் பணி எனக்கு வழங்கப்பட்டு உள்ளது. புதிய சபாநாயகர் தேர்வு செய்யப்பட்டு வரும் வரை தற்காலிக சபாநாயகர் பதவியில் நீடிப்பேன்.

    இன்று காலை 10 மணி அளவில் சட்டசபை கூடும். அதன் பின்னர் முதல்-அமைச்சர், அமைச்சர்கள், ஒவ்வொரு கட்சித்தலைவர்கள் என அத்தனை உறுப்பினர்களுக்கும் அகர வரிசைப்படி பதவி பிரமாணம் செய்து வைக்கப்படும். அனைத்து கட்சியினருக்கும் இதற்கான அழைப்பு விடப்பட்டுள்ளது.

    சபாநாயகர், துணை சபாநாயகர் யார்? என்பதை கட்சியின் தலைமை அறிவிக்கும். அதன்பிறகு அவர்கள் அந்த பதவிக்காக வேட்புமனு தாக்கல் செய்வார்கள். அதற்கு இன்னும் கால அவகாசம் உள்ளது.

    நான் துணை சபாநாயகராக முன்னிலைப்படுத்தப்படுவதாக நீங்கள் கூறினாலும், என்னை பொருத்தவரை கட்சியின் தலைமைதான் இதில் முடிவு எடுக்க வேண்டும்.

    கொரோனா தொற்றுடையவர்கள் இருந்தால், அவர்களுக்கு பின்னர் சபாநாயகர் தனது அறையில் பதவி பிரமாணம் செய்து வைப்பார். உடல்நிலை சரியான பிறகு அவர்கள் வந்து பதவி பிரமாணம் செய்து கொள்ளலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பின்னர் எம்.எல்.ஏ.க்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைக்கப்படும் கலைவாணர் அரங்கில் உள்ள சட்டசபை அரங்கத்திற்கு சென்று அங்கு செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளை கு.பிச்சாண்டி பார்வையிட்டார். அவருடன் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் உடன் சென்றார்.

    தற்காலிக சபாநாயகராக பதவியேற்றுள்ள கு.பிச்சாண்டி தமிழக சட்டசபை தேர்தலில் 8 முறை தி.மு.க. சார்பில் போட்டியிட்டு 6 முறை வெற்றி பெற்று சபையை அலங்கரித்துள்ளார். 4 முறை திருவண்ணாமலை தொகுதியிலும், 2 முறை கீழ்பெண்ணாத்தூரிலும் அவர் வெற்றி பெற்றுள்ளார்.

    குறிப்பாக 1996-2001-ம் ஆண்டுகளில் வீட்டுவசதித்துறை அமைச்சராகவும் அவர் பணியாற்றியுள்ளார்.
    Next Story
    ×