search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கலெக்டர் அண்ணாதுரை ஆய்வு மேற்கொண்டபோது எடுத்த படம்.
    X
    கலெக்டர் அண்ணாதுரை ஆய்வு மேற்கொண்டபோது எடுத்த படம்.

    கொரோனா பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகள் முறையாக பின்பற்றப்படுகிறதா? - கலெக்டர் ஆய்வு

    விழுப்புரம் நகரில் கொரோனா பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகள் முறையாக பின்பற்றப்படுகிறதா? என்று கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்.
    விழுப்புரம்:

    விழுப்புரம் நகரில் கொரோனா நோய் தொற்று பரவலை தடுக்க அரசின் பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகளை முழுமையாக பின்பற்றி கடைகள் செயல்பட வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டிருந்தது.

    இந்நிலையில் அரசின் பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகள் முறையாக பின்பற்றப்படுகிறதா? என்று மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை திடீர் ஆய்வு மேற்கொண்டார். விழுப்புரம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து நகராட்சி அலுவலகம் வரை அவர் நடந்தே சென்று ஒவ்வொரு கடையாக பார்வையிட்டார்.

    அப்போது பொதுமக்கள் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்றி அத்தியாவசிய பொருட்களை வாங்கிச்செல்வதையும், அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளில் வழிகாட்டு நெறிமுறைகளின்படி கை கழுவும் திரவம் மக்கள் பயன்பாட்டிற்கு வைக்கப்பட்டுள்ளதையும், கடைகளில் பணிபுரியும் பணியாளர்கள் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்றி பொருட்களை விற்பனை செய்வதையும் கலெக்டர் அண்ணாதுரை பார்வையிட்டார். அதோடு முக கவசம் அணிந்து வரும் பொதுமக்களுக்கு மட்டுமே பொருட்களை விற்பனை செய்ய வேண்டும் என்று கடை உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தினார்.

    மேலும் காய்கறி கடைகள், மளிகை கடைகள், பழக்கடைகள், பலசரக்கு கடைகளில் ஆய்வு மேற்கொண்ட அவர், கடைகளில் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் இருந்தாலோ, பணியாளர்கள் முக கவசம் அணியாமல் இருந்தாலோ சம்பந்தப்பட்ட கடைகளுக்கு அபராதம் விதிக்கும்படியும், தேவைப்பட்டால் சீல் வைக்கும்படியும் நகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். நகரில் உள்ள டாஸ்மாக் கடைகளில் ஆய்வு மேற்கொண்ட கலெக்டர், கடைக்கு மதுவாங்க வருபவர்களுக்கு அளவோடு மதுபாட்டில் விற்பனை செய்யும்படியும், பெட்டி, பெட்டியாக மொத்தமாக விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அதே நேரத்தில் அரசின் பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி மது விற்பனை செய்யும்படியும் உத்தரவிட்டார்.

    இதனை தொடர்ந்து பஸ்சில் பயணம் செய்யும் பயணிகள் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்றி அனுமதிக்கப்பட்ட 50 சதவீத இருக்கைகளில் மட்டுமே அமர்ந்து பயணம் செய்கிறார்களா? என்று கலெக்டர் ஆ.அண்ணாதுரை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    இந்த ஆய்வின்போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எஸ்.ராதாகிருஷ்ணன், துணை போலீஸ் சூப்பிரண்டு நல்லசிவம், விழுப்புரம் நகராட்சி ஆணையர் தட்சிணாமூர்த்தி ஆகியோர் உடனிருந்தனர்.
    Next Story
    ×