search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரெம்டெசிவிர் மருந்து
    X
    ரெம்டெசிவிர் மருந்து

    கோவையில் இன்று காலை ரெம்டெசிவிர் மருந்து வாங்க அலைமோதிய கூட்டம்

    கோவையில் இன்று காலை முதலே ரெம்டெசிவிர் மருந்துவாங்க கூட்டம் அலைமோதியது. டோக்கன் பெற்றவர்கள் உள்பட ஏராளமானோர் நீண்ட வரிசையில் காத்து நின்று மருந்தை வாங்கி சென்றனர்.

    கோவை:

    கோவை அரசு மருத்துவக் கல்லூரியில் கொரோனா நோயாளிகளுக்குத் தேவையான ரெம்டெசிவிர் மருந்து விற்பனை சனிக்கிழமை தொடங்கியது. இந்த மருந்து தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகத்திடம் இருந்து பெறப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. ஞாயிற்றுக்கிழமை தவிர்த்து மற்ற நாள்களில் மருந்து விற்பனை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

    இந்நிலையில் 50-க்கும் மேற்பட்டவர்கள் ரெம்டெசிவிர் மருந்து வாங்குவதற்காக அரசு மருத்துவக் கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை குவிந்தனர். காலை முதலே வந்த மக்கள் வெகுநேரம் காத்திருந்தனர். அதன்பின் ஞாயிற்றுக்கிழமை மருந்து விற்பனை இல்லை என்று தெரிந்த மக்கள் ஏமாற்றமடைந்தனர். மருந்து வங்குவதற்காக வெகு தூரத்தில் இருந்து வந்துள்ளதாகவும், காலை முதல் காத்திருப்பதாகவும் தெரிவித்து மருந்து வழங்க வலியுறுத்தினர்.

    ஆனால், தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்றும் அவர்கள் மருந்து வழங்கினால்தான் விற்பனை செய்ய முடியும் என்றும் பணியாளர்கள் தெரிவித்தனர். அதன்பின் மருந்து வாங்க வந்திருந்த அனைவருக்கும் டோக்கன் கொடுத்து இன்று வருமாறு தெரிவித்தனர்.

    மருந்து வாங்க வந்த 63 பேருக்கு டோக்கன் கொடுத்து இன்று வருமாறு தெரிவிக்கப்பட்டது. டோக்கன் கொடுத்தவர்களுக்கு இன்று முன்னுரிமை அளிக்கப்பட்டு ரெம்டெசிவிர் மருந்து வழங்கப்பட்டது.

    இதையடுத்தும் இன்று காலை முதலே ரெம்டெசிவிர் மருந்துவாங்க கூட்டம் அலைமோதியது. டோக்கன் பெற்றவர்கள் உள்பட ஏராளமானோர் நீண்ட வரிசையில் காத்து நின்று மருந்தை வாங்கி சென்றனர்.

    Next Story
    ×