search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரேஷன் கடையில் கைரேகை பதிவு செய்யப்படுவதை காணலாம்.
    X
    ரேஷன் கடையில் கைரேகை பதிவு செய்யப்படுவதை காணலாம்.

    ரேஷன் கடைகளில் தொடரும் கைரேகை பதிவு முறை- பொதுமக்கள் அச்சம்

    கொரோனா பரவல் கட்டுப்படும் வரை கைரேகை பதிவு முறையை ரத்து செய்துவிட்டு பழைய முறையில் பொருட்கள் வழங்க வேண்டும் என்று பொதுமக்கள் கூறினர்.
    போடிப்பட்டி:

    தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களில் பொது விநியோகத் திட்டத்தில் ரேஷன்கடைகள் செயல்பட்டு வருகிறது. இதன்மூலம் குடும்ப அட்டைதாரர்கள் பயனடைந்து வருகின்றனர். இந்த கார்டுதாரர்களுக்கு அரிசி, சர்க்கரை, கோதுமை, உளுந்து, துவரம்பருப்பு, பாமாயில் உள்ளிட்ட பொருட்கள் குறைந்த விலையில் வழங்கப்பட்டு வருகிறது.

    இந்த திட்டத்தில் முறைகேடுகளைத் தவிர்த்து பொதுமக்களுக்கு உரிய முறையில் பொருட்கள் சென்று சேர்வதை உறுதி செய்யும் வகையில் அவ்வப்போது பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது.

    அதன்படி குடும்ப உறுப்பினர்கள் அனைவரின் ஆதார் எண்களை ரேஷன் கார்டுடன் இணைத்தல், ஸ்மார்ட் கார்டு உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. அனைத்து ரேஷன் கடைகளுக்கும் பாயிண்ட் ஆப் சேல் என்னும் கருவி வழங்கப்பட்டு ஸ்மார்ட் கார்டுகளிலுள்ள பார்கோடுகளை ஸ்கேன் செய்து பொருள் வழங்கும் முறை கொண்டு வரப்பட்டது.இந்த திட்டத்தில், ஸ்மார்ட் கார்டுகளை கொண்டு வரும் யார் வேண்டுமானாலும் அந்த கார்டுக்குரிய பொருட்களை வாங்கிக் கொள்ளலாம். இந்த நடைமுறைக்குப் பிறகும் முறைகேடுகள் தொடர்வதாக குற்றச்சாட்டு எழுந்தது.

    இதனைத் தொடர்ந்து கடந்த 2020 அக்டோபர் முதல் குடும்ப உறுப்பினர்கள் விரல் ரேகையைப் பதிவு செய்தால் மட்டுமே பொருட்கள் வாங்க முடியும் என்னும் பயோ மெட்ரிக் நடைமுறை கொண்டு வரப்பட்டது. அதற்கென அனைத்து ரேஷன் கடைகளுக்கும் புதிய விற்பனை முனைய எந்திரம் வழங்கப்பட்டது. அதன்படி தற்போது வரை ரேஷன் கடைகளில் விரல் ரேகையைப் பதிவு செய்து பொதுமக்கள் பொருட்களை வாங்கிச் செல்கின்றனர்.

    இந்தநிலையில் தற்போது தமிழகத்தின் பல பகுதிகளிலும் கொரோனா பரவலின் 2 வது அலை ஆக்ரோஷமாகத்தாக்குதல் நடத்தி வருகிறது. இதிலிருந்து தப்பிக்க இன்று (திங்கள்) முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதேநேரத்தில் ஊரடங்கு காலத்திலும் பொதுமக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் தட்டுப்பாடில்லாமல் கிடைக்கும் வகையில் ரேஷன் கடைகள் மதியம் 12 மணி வரை செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    ஆனாலும் தற்போது வரை விரல் ரேகை பதிவு செய்தால் மட்டுமே பொருட்கள் வாங்க முடியும் என்ற நடைமுறை தொடர்கிறது. இது பொதுமக்களிடையே கொரோனா பரவல் குறித்த அச்சத்தை உருவாக்கியுள்ளது.

    இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:-

    கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த சமூக விலகல் முக்கியமானதாக இருக்கிறது.ஆனால் ரேஷன் கடைகளில் தொடர்ச்சியாக அனைவரும் ஒரே எந்திரத்தில் கைரேகையைப் பதிவு செய்ய வேண்டியதுள்ளது. இதன்மூலம் கொரோனா பரவல் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே கொரோனா பரவல் கட்டுப்படும் வரை கைரேகை பதிவு முறையை ரத்து செய்து விட்டு பழைய முறையில் பொருட்கள் வழங்க வேண்டும் என்று கூறினர்.

    மேலும் தற்போது கொரோனா நிவாரண நிதியாக அரசு முதல் கட்டமாக ரூ 2 ஆயிரம் வழங்குகிறது.இதற்கென ரேஷன் கடை பணியாளர் மூலம் வீடு வீடாக டோக்கன் வழங்கி அதில் குறிப்பிட்ட நாட்களில் பணம் வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.பல இடங்களில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாகவும் பணிச்சுமை காரணமாகவும் வீடு வீடாக செல்வதற்கு ரேஷன் கடை ஊழியர்கள் தயாராக இல்லை. எனவே டோக்கன் வாங்குவதற்கு ஒருநாள், பணம் வாங்குவதற்கு ஒருநாள் என 2 நாட்கள் ரேஷன் கடையில் வரிசையில் நிற்கும் நிலை ஏற்படுகிறது. எனவே டோக்கன் வழங்குவதைத் தவிர்த்து பகுதி வாரியாக ஒரே நாளில் உதவித்தொகை வழங்க வேண்டும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
    Next Story
    ×