search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    திருப்பூர் மாவட்டத்தில் ஒரே நாளில் ரூ.18 கோடிக்கு மது விற்பனை

    திருப்பூர் மாவட்டத்தில் ஒரே நாளில் ரூ.18 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றது. பெட்டி, பெட்டியாக மதுபாட்டில்களை மதுபிரியர்கள் அள்ளிச்சென்றனர்.
    திருப்பூர்:

    தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை தடுக்கும் விதமாக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக பல்வேறு கட்டுப்பாடுகளையும் தமிழக அரசு விதித்துள்ளது.

    இந்நிலையில் இன்று (திங்கட்கிழமை) முதல் 2 வாரத்திற்கு முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கின் போது ஒரு சிலவற்றிற்கு தளர்வுகளும், சிலவற்றிற்கு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளது.

    அந்த வகையில் டாஸ்மாக் கடைகள் முழு ஊரடங்கு நாட்களில் மூடவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக நேற்று முன்தினம் காலையில் இருந்து மாலை 6 மணி வரை டாஸ்மாக் கடைகளில் மதுப்பிரியர்கள் குவிந்தனர். 2 வாரத்திற்கும் சேர்த்து தங்களுக்கு தேவையான மற்றும் பிடித்தமான மதுவகைகளை பெட்டி, பெட்டியாக அள்ளிச்சென்றனர்.

    இதன் காரணமாக அனைத்து பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளிலும் மதுவிற்பனை நேற்று முன்தினம் மும்முரமாக நடந்தது. திருப்பூர் மாவட்டத்தில் மொத்தம் 253 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. அனைத்து டாஸ்மாக் கடைகளையும் சேர்த்து நேற்று முன்தினம் ஒரே நாளில் ரூ.18 கோடிக்கு மதுவிற்பனை நடைபெற்றது என டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இதுபோல் நேற்றும் அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் மதுவிற்பனை மும்முரமாக நடந்தது. பல்வேறு இடங்களில் மதுப்பிரியர்கள் நீண்ட வரிசையிலும், சில இடங்களில் முண்டியடித்துக்கொண்டும் மது வகைகளை வாங்கிச்சென்றனர். இதனால் நேற்று முன்தினத்தை விட நேற்று மதுவிற்பனை அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது.

    அனைவரும் ஒரே நேரத்தில் மதுவகைகளை வாங்க குவிந்ததால் பலரும் தங்களுக்கு பிடித்தமான மதுவகைகள் கிடைக்காமல் வேறு வகைகளை வாங்கி சென்றது குறிப்பிடத்தக்கது.

    அவினாசியில் நேற்று காலை 8 மணிக்கே மதுக்கடை திறந்ததும் மதுப்பிரியர்கள் வரிசையில் நின்று மதுபாட்டில்களை வாங்கி சென்றனர். சிலர் 5, 10 பாட்டில் என மொத்தமாக வாங்கி சென்றனர்.

    இது குறித்து மதுப்பிரியர்கள் கூறுகையில், மது குடித்து பழகிவிட்டது. சாப்பாடு கூட இல்லாமல் இருந்து விடலாம். ஆனால் மது இல்லையென்றால் வாழ்க்கையில் விரக்தி ஏற்படுகிறது. தினசரி கூலி வேலைக்கு செல்வதால் வேலை பளு காரணமாக அசதியை நீக்க மதுஅருந்தி பழகிவிட்டது. இனி 15 நாட்களுக்கு மது கிடைக்காது என்பதை நினைத்தால் மிகவும் வருத்தமாக உள்ளது என்றனர்.
    Next Story
    ×