search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    டாஸ்மாக் மது கடைகளில் நேற்று ஒரேநாளில் ரூ.426 கோடிக்கு விற்பனை - சென்னை முதலிடம்

    2 வாரங்கள் மதுக்கடைகள் மூடப்படுவதால் மது பாட்டில்களை வாங்கி இருப்பு வைத்துக் கொள்ள ஆர்வம் காட்டியதால் டாஸ்மாக் கடைகளில் கூட்டம் நிரம்பி வழிந்தது.

    சென்னை:

    கொரோனா தொற்று வேகமாக பரவுவதால் தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு நாளை முதல் 24-ந் தேதி வரை அமல்படுத்தப்படுகிறது.

    இந்த உத்தரவு நேற்று நண்பகல் பிறப்பிக்கப்பட்டதால் டாஸ்மாக் மதுக்கடைகளில் மதுப்பிரியர்கள் குவிந்தனர். நேற்று காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரை விற்பனை நேரமாக இருந்த நிலையில் அரசின் திடீர் உத்தரவின் காரணமாக டாஸ்மாக் விற்பனை நேரம் மாற்றப்பட்டது.

    சனி, ஞாயிறு 2 நாட்களும் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை டாஸ்மாக் கடைகள் செயல்படும் என்றும் அதன் பின்னர் 14 நாட்களுக்கு மூடப்படும் என்றும் உத்தரவில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

    இதைத் தொடர்ந்து சென்னை உள்ளிட்ட அனைத்து நகரகங்கள் மற்றும் கிராமப்பகுதிகளில் உள்ள மதுக்கடைகளில் நீண்ட வரிசை காணப்பட்டது.

    மதுபாட்டில்களை வாங்கி இருப்பு வைத்து கொள்ளும் வகையில் பெட்டி பெட்டியாக மொத்தமாக வாங்கி சென்றனர். இதனால் நேற்று ஒரே நாளில் ரூ.426.24 கோடிக்கு மதுவிற்பனை நடந்துள்ளது.

    சென்னையில் அதிகபட்சமாக ரூ.100.43 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளது. மதுரை மண்டலத்தில் ரூ.87.28 கோடியும், திருச்சி மண்டலத்தில் ரூ.82.59 கோடியும், சேலம் மண்டலத்தில் ரூ.79.82 கோடியும், கோவை மண்டலத்தில் ரூ.76.12 கோடியும் மது விற்பனை நடந்துள்ளது.

    இது வழக்கமான விற்பனையை விட 3 மடங்கு அதிமாகும். இன்று இதைவிட அதிகமாக மது விற்பனையாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரூ.500 கோடிக்கு மேல் விற்பனையாக வாய்ப்பு உள்ளது.

    2 வாரங்கள் மதுக்கடைகள் மூடப்படுவதால் மது பாட்டில்களை வாங்கி இருப்பு வைத்துக் கொள்ள ஆர்வம் காட்டியதால் டாஸ்மாக் கடைகளில் கூட்டம் நிரம்பி வழிந்தது.

    இந்த நிலையில் மாலை 6 முதல் மதுக்கடைகள் மூடப்படுவதால் இன்று கூட்டம் மேலும் அதிகரித்தது. காலை 9 மணிக்கே கடைகள் முன்பு வரிசையில் நிற்க தொடங்கினார்கள்.

    பெரிய அளவிலான பை, கூடைகள் போன்றவற்றை எடுத்துக்கொண்டு வரிசையில் நின்றனர்.

    கடை திறந்தவுடன் மதுபானங்களை மொத்தமாக வாங்கிச் சென்றனர். தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பீர் பாட்டில்கள் அதிகமாக விற்பனையானது.

    கோப்புபடம்

    இதுதவிர பிராந்தி, விஸ்கி, ரம் போன்ற மதுவகைகளும் பெட்டி பெட்டியாக அள்ளிச் சென்றனர். பகல் நேரத்தை விட மாலையில் இன்னும் கூட்டம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இதனால் நேற்றைவிட இன்று விற்பனை மேலும் அதிகரிக்கக் வாய்ப்புள்ளது. சென்னையில் மட்டுமின்றி அண்டை மாவட்டமான காஞ்சீபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களிலும் மதுக்கடைகளில் இன்று காலையில் நீண்ட வரிசை காணப்பட்டது.

    இருசக்கர வாகனங்களிலும், கார்களிலும் வந்து மதுப்பிரியர்கள் மொத்தமாக வாங்கிச் சென்றனர். ஊரடங்கு காலத்தில் வீட்டில் இருந்து மது அருந்தும் பழக்கத்தை உடையவர்கள் மட்டுமின்றி நண்பர்கள் ஒன்று சேர்ந்து மொத்தமாகவும், மதுபானங்களை வாங்கி சென்றனர்.

    தமிழகத்தில் 5,400 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கடைகளில் இன்று அமோக மதுவிற்பனை நடக்கிறது. மது தட்டுப்பாடு இல்லாமல் வழங்குவதற்கு அனைத்து ஏற்பாடுகளையுளம் மாவட்ட டாஸ்மாக் நிர்வாகம் செய்துள்ளது.

    அனைத்து வகையான மதுபானங்களும், தேவையான அளவு இருப்பு வைக்கப்பட்டு உள்ளது. விற்பனை அளவை கணக்கிட்டு லாரிகளில் சரக்கு குவிக்கப்பட்டு உள்ளது.

    Next Story
    ×