search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்காலிக பஸ் நிலையத்தில் இருந்து வெளியூர் செல்ல பஸ் ஏறிய பயணிகளை படத்தில் காணலாம்.
    X
    தற்காலிக பஸ் நிலையத்தில் இருந்து வெளியூர் செல்ல பஸ் ஏறிய பயணிகளை படத்தில் காணலாம்.

    முழு ஊரடங்கு அறிவிப்பு - சொந்த ஊருக்கு புறப்பட்ட தொழிலாளர்கள்

    முழு ஊரடங்கு அறிவிப்பையொட்டி திருப்பூரில் இருந்து தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு நேற்று புறப்பட்டனர். இதனால் பஸ் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.
    திருப்பூர்:

    கொரோனா பரவல் அதிகரித்து வருவதை தொடர்ந்து தமிழகத்தில் நாளை (திங்கட்கிழமை) முதல் வருகிற 24-ந் தேதி வரை முழு ஊரடங்கை அரசு அறிவித்துள்ளது. அத்தியாவசிய தேவைக்கான கடைகள் மட்டும் மதியம் 12 மணி வரை செயல்பட அனுமதி அளித்து, மற்ற கடைகள், தொழில் நிறுவனங்கள் அனைத்தையும் மூட அரசு உத்தரவிட்டுள்ளது.

    பனியன் தொழில் நகரான திருப்பூரில் வெளிமாநில, வெளிமாவட்ட தொழிலாளர்கள் அதிகம் தங்கி பணியாற்றி வருகிறார்கள். முழு ஊரடங்கு அறிவிப்பு காரணமாக வெளி மாவட்ட தொழிலாளர்கள் பெரும்பாலானவர்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்ல தயாரானார்கள்.

    நேற்று, இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய 2 நாட்களும் அரசு மற்றும் தனியார் பஸ்கள் வழக்கம் போல் இயங்கும் என்று அரசு அறிவித்துள்ளது. இதை பயன்படுத்தி திருப்பூர் மாநகரம் மற்றும் மாவட்டத்தின் பல பகுதிகளில் உள்ள வெளிமாவட்ட தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்கு நேற்று புறப்பட்டு சென்றனர்.

    இதன் காரணமாக அரசு பஸ்களில் பயணிகள் கூட்டம் நேற்று அதிகமாக காணப்பட்டது. 2 வாரங்கள் முழு ஊரடங்கு இருப்பதால் சொந்த ஊரில் இருந்து விட்டு அதன் பிறகு நிலைமைக்கு ஏற்ப திருப்பூர் வரலாம் என்று தொழிலாளர்கள் சொந்த ஊர் புறப்பட்டு சென்றனர். இதனால் காலை முதலே பஸ்களில் கூட்டம் காணப்பட்டது.

    தென்மாவட்டங்களுக்கு செல்வதற்காக கோவில்வழி பஸ் நிலையம் மற்றும் யுனிவர்சல் தியேட்டர், பழைய பஸ் நிலையம், புதிய பஸ் நிலையம் ஆகிய பகுதிகளில் பயணிகள் கூட்டம் நேற்று அதிகமாக காணப்பட்டது.

    தொழிலாளர்கள் மொத்த மொத்தமாக பஸ் நிலையங்களுக்கு வந்து பஸ்களில் ஏறி சொந்த ஊர் புறப்பட்டு சென்றனர். இன்றும் தொழிலாளர்கள் சொந்த ஊர் செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    Next Story
    ×