search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஓ.பன்னீர்செல்வம்
    X
    ஓ.பன்னீர்செல்வம்

    தமிழக அரசின் அறிவிப்புக்கு ஓ.பன்னீர்செல்வம் வரவேற்பு

    எளியோரின் பசி தீர்க்கும் அம்மா உணவகங்கள் ஊரடங்கு காலத்தில் தொடர்ந்து செயல்பட அனுமதிக்கப்பட்டிருப்பதையும், டாஸ்மாக் கடைகள் மூடப்படுவதையும் வரவேற்கிறேன்.
    சென்னை:

    தமிழக அரசு அறிவித்துள்ள முழு ஊரடங்கு நோய்த்தொற்றின் தீவிரத்தை கட்டுப்படுத்த பேரூதவியாக இருக்கும் என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

    தமிழக அரசு அறிவித்துள்ள முழு ஊரடங்குக்கு வரவேற்பு தெரிவித்து, அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தனது டுவிட்டர் பதிவில் வெளியிட்ட செய்தியில் கூறப்பட்டு உள்ளதாவது:-

    கொரோனா 2-வது அலை தீவிரமாக பரவி வரும் இந்த சூழலில், முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருப்பது நோய்த் தொற்று பரவலின் தீவிரத்தை கட்டுப்படுத்த பேரூதவியாக இருக்கும். எளியோரின் பசி தீர்க்கும் அம்மா உணவகங்கள் ஊரடங்கு காலத்தில் தொடர்ந்து செயல்பட அனுமதிக்கப்பட்டிருப்பதையும், டாஸ்மாக் கடைகள் மூடப்படுவதையும் வரவேற்கிறேன்.

    தமிழக அரசு


    அரசு போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளதால் ஏழை-எளிய பொதுமக்கள், அவசர மருத்துவ சிகிச்சை மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியில் செல்ல ஏதுவாக வாடகை கார் மற்றும் ஆட்டோக்கள் 24 மணி நேரமும் இயங்குவதை அரசு உறுதி செய்ய வேண்டும்.

    மேலும் மினி கிளினிக்குகளின் எண்ணிக்கையையும், அதில் தற்காலிக டாக்டர்களின் நியமனத்தையும் அதிகரித்து 24 மணி நேரமும் இயங்க செய்தால் பெரிய அரசு ஆஸ்பத்திரிகளில் கூட்டம் குறையும். நோயாளிகளின் சிரமம் களையப்படும். கடந்த ஓராண்டுக்கும் மேலாக தொடர்ந்து கொரோனா தொற்றுக்கு சிகிச்சை அளித்து வருகின்ற டாக்டர்கள், செவிலியர்கள் மற்றும் பிற பணியாளர்களது சேவையை கவுரவிக்கும் வண்ணம் ஊக்கத்தொகை வழங்கி அவர்கள் பணியை ஊக்குவிக்க வேண்டும்.

    ஆஸ்பத்திரிகளில் தடுப்பூசிகள், மருந்துகள், படுக்கை வசதிகள் மற்றும் ஆக்சிஜன் ஆகியவற்றை இருப்பு வைத்துக்கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு, பொதுமக்கள் பாதுகாப்பினை உறுதி செய்ய வேண்டும். உயிர் பலி எண்ணிக்கையை குறைக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×