search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காய்கறிகள்
    X
    காய்கறிகள்

    திருச்சி காந்தி மார்கெட்டில் காய்கறி விலை கடும் வீழ்ச்சி

    திருச்சி மார்க்கெட்டுக்கு 22 டன் தக்காளி வந்தது. அதில் 11 டன்தான் விற்பனை ஆகியுள்ளது.
    திருச்சி:

    தமிழகத்தில் கொரோனா வேகமாக பரவுவதால் நேற்று முதல் புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. அதற்கு முன்பு இரவு நேர ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமைகளில் முழுநேர ஊரடங்கும் நடைமுறையில் இருந்தது. நேற்று முதல் மளிகை, ஸ்வீட் கடை, காய்கறி மற்றும் டீக்கடைகளுக்கு மட்டுமே காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரை திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

    ஓட்டல்களில் பார்சல்கள் மட்டுமே சப்ளை செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கோவில் திருவிழா கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. திருமண வீடுகளில் 50 பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

    இதுபோன்ற கட்டுப்பாடுகளால் திருச்சி காந்தி மார்க்கெட் மற்றும் தென்னூர் உழவர் சந்தையில் காய்கறி விலை கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது.

    இதுபற்றி காந்தி மார்க்கெட் வியாபாரிகள் நலச்சங்க தலைவர் கமலக்கண்ணன் கூறும்போது, பொதுவாக மே, ஜூன் மாதங்களில் பண்டிகைகள், திருமணங்கள் தடபுடலாக இருக்கும். ஓட்டல்களிலும் மொத்தமாக காய்கறிகள் கொள்முதல் செய்வார்கள். இப்போது தேவைகள் சுருங்கி வரத்து அதிகமாக இருக்கிறது. இதனால் காய்கறி விலை சரிந்துள்ளது.

    நேற்றைய தினம் வெண்டைக்காய் கிலோ ரூ. 5-க்கும், தக்காளி-ரூ.8-க்கும், பீன்ஸ்-ரூ.15-க்கும், கேரட் ரூ.10-க்கும், சவ்சவ் ரூ. 9-க்கும், கத்தரிக்காய் ரூ.20-க்கும், மிளகாய் ரூ.15-க்கும் விற்பனை செய்யப்பட்டது என்றார்.

    மேலும் அவர் கூறும்போது, திருச்சி மார்க்கெட்டுக்கு 22 டன் தக்காளி வந்தது. அதில் 11 டன்தான் விற்பனை ஆகியுள்ளது. 13 டன் தக்காளி குடோனில் இருக்கிறது என தெரிவித்தார்.

    காய்கறிகள் அழுகும் பொருள் என்பதாலும், குறுகிய நேர விற்பனை என்பதாலும் வியாபாரிகள் விற்றால் போதும் என்ற நிலையில் இருக்கிறார்கள். இதனால் நிர்ணயிக்கப்பட்ட விலையிலோ அதில் இருந்து குறைத்தோ விற்கிறார்கள்.

    திருச்சியை சேர்ந்த தக்காளி விவசாயி ராஜேந்திரன் என்பவர் கூறும்போது, வழக்கமாக இந்த காலகட்டத்தில் தக்காளி விலை ரூ.25 ஆக இருக்கும். ஆனால் நிலைமை தலைகீழாக இருக்கிறது. ஒவ்வொரு கிலோ தக்காளியிலும் விவசாயிகளுக்கு ரூ.18 நஷ்டம் ஏற்படுகிறது. காய்கறி விவசாயிகளை அரசு காப்பாற்ற வேண்டும் என்றார்.

    Next Story
    ×