search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உயிரிழப்பு
    X
    உயிரிழப்பு

    அரசு ஆஸ்பத்திரியில் அடுத்தடுத்து 5 பேர் உயிரிழப்பு- ஆக்சிஜன் பற்றாக்குறையா?

    திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைபெற்று வந்த 5 பேர் அடுத்தடுத்து இறந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக அவர்கள் இறந்தார்களா? என்பது குறித்து ஆஸ்பத்திரி நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.
    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் தனி வார்டில் மட்டும் 220 நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று அதிகாலைக்குள் 5 நோயாளிகள் அடுத்தடுத்து இறந்ததாக கூறப்படுகிறது.

    மேலும் இறந்தவர்களுக்கு கொரோனா தொற்று இருந்ததாகவும், ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் உயிரிழந்தாகவும் தகவல் பரவியது. ஏற்கனவே வேலூர் அரசு ஆஸ்பத்திரி மற்றும் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் ஆக்கிஜன் பற்றாக்குறையால் நோயாளிகள் இறந்ததாக கூறப்பட்டு வந்த நிலையில் திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரியிலும் அதுபோன்ற சம்பவம் நடந்ததாக தகவல் பரவியதை தொடர்ந்து பரபரப்பு ஏற்பட்டது.

    அதைத்தொடர்ந்து திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் இறந்தவர்கள் 5 பேரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் இல்லை என்றும், பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்கள் திடீரென இறந்துள்ளதாகவும், ஆஸ்பத்திரியில் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏதும் கிடையாது என ஆஸ்பத்திரி நிர்வாகம் தெரிவித்தது.

    இதுதொடர்பாக திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரி மருத்துவ அலுவலர் திலீபன் கூறுகையில், திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் போதுமான அளவு ஆக்சிஜன் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. இறந்ததாக கூறப்படும் விஷமங்கலத்தைச்சேர்ந்த மாது (வயது 63) மூளை சம்பந்தமான பிரச்சினையால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அதேபோல் ஆரிப் நகரைச் சேர்ந்த ஷேக்அலியின் மனைவி சைரா (38) சின்னமூக்கனூர் பகுதியைச் சேர்ந்த சக்திகுமார் (40), நாட்டறம்பள்ளி வட்டம், தகரகுப்பம் பகுதியைச் சேர்ந்த ஜெயசங்கர் (45), திருப்பத்தூர் சின்ன மதார் தெருவைச் சேர்ந்த ஹக்கீம் (63) ஆகியோர் வெவ்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளனர். இவர்கள் யாருக்கும் கொரோனா தொற்று இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×