search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கலெக்டர் சிவன்அருள்
    X
    கலெக்டர் சிவன்அருள்

    மளிகை, காய்கறி கடைகளை தவிர மற்ற அனைத்து கடைகளும் திறக்க தடை- கலெக்டர் சிவன்அருள் உத்தரவு

    திருப்பத்தூர் மாவட்டத்தில் மளிகை, காய்கறி கடைகளை தவிர மற்ற அனைத்து கடைகளும் திறக்க தடைவிதிக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் சிவன்அருள் தெரிவித்துள்ளார்.
    திருப்பத்தூர்:

    கலெக்டர் சிவன்அருள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கொரோனா வைரஸ் தொற்றை தடுப்பதற்காக மத்திய, மாநில அரசின் வழிகாட்டுதலின்படி திருப்பத்தூர் மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வருகிறது. திருப்பத்தூர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நோய் பரவலை தடுக்க தமிழக அரசின் வழிகாட்டுதலின்படி நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்த இன்று (வியாழக்கிழமை) அதிகாலை 4 மணி முதல் வருகிற 20-ந் தேதி வரை பின்வரும் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன.

    மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு, தனியார் அலுவலகங்கள் 50 சதவீத பணியாளர்களுடன் இயங்க அனுமதிக்கப்படுகிறது. அரசு, தனியார் பஸ்கள், வாடகை டாக்சி ஆகியவற்றில் 50 சதவீத இருக்கையில் மட்டுமே பொதுமக்கள் அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்படுகிறது. 3000 சதுர அடிக்கு மேற்பட்ட கடைகள், வணிக வளாகங்கள் இயங்க ஏற்கனவே தடை விதிக்கப்பட்டது.

    தற்போது வணிக வளாகங்களில் இயங்கும் பலசரக்கு கடைகள் மற்றும் காய்கறி கடைகளுக்கும் அனுமதி இல்லை. தனியாக செயல்படுகின்ற மளிகை, பலசரக்கு மற்றும் காய்கறி விற்பனை கடைகள் குளிர்சாதன வசதி இன்றி மதியம் 12 மணி வரை இயங்க அனுமதிக்கப் படுகிறது.

    இவற்றில் ஒரே சமயத்தில் 50 சதவீதம் வாடிக்கையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும். மேற்கூறிய பலசரக்கு மற்றும் காய்கறி கடைகள் தவிர இதர கடைகள் அனைத்தும் திறக்க தடை விதிக்கப்படுகிறது. மருத்துவம், பால் வினியோகம் போன்ற அத்தியாவசிய பணிகள் வழக்கம் போல எந்த தடையுமின்றி செயல்பட அனுமதிக்கப்படுகிறது. அனைத்து உணவகங்களிலும் பார்சல் சேவை வழங்க அனுமதிக்கப்படுகிறது. டீ கடை மதியம் 12 மணி வரை மட்டுமே செயல்பட வேண்டும்.

    நோய்த்தொற்று அறிகுறிகளான சாதாரண சளி, இருமல், காய்ச்சல், உடம்பு வலி மற்றும் நுகர்வு தன்மை இழப்பு போன்ற அறிகுறிகள் தென்பட்டவுடன் பொதுமக்கள் உடனே அருகில் உள்ள மருத்துவமனைகளை நாடி மருத்துவ ஆலோசனை பெற்று முதல் நிலையிலேயே நோய்த் தொற்றில் இருந்து விடுபடலாம். பொதுமக்கள் அச்சம் கொள்ளாமல் சாதாரண அறிகுறிகள் இருந்தால் வீடுகளில் இருந்துவிட வேண்டாம்.

    நோய் முற்றி மருத்துவமனைகளுக்கு வருவதை தவிர்த்து தொடக்கத்திலேயே சிகிச்சைகளை எடுத்துக் கொண்டு தங்களையும், தங்கள் குடும்பத்தாரையும் நோய்களிலிருந்து தற்காத்துக் கொள்ள வேண்டும். நோய்களை கட்டுப்படுத்திட இன்று முதல் நடைமுறைப்படுத்தப்படும் கட்டுப்பாட்டுக்கு பொதுமக்கள், வணிகர்கள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×