search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜி.கே மணி
    X
    ஜி.கே மணி

    பொதுமக்களை காப்பாற்ற மத்திய, மாநில அரசுகள் அதிக கவனம் செலுத்த வேண்டும் - ஜி.கே.மணி அறிக்கை

    கொரோனா தொற்றில் இருந்து பொதுமக்களை காப்பாற்ற மத்திய, மாநில அரசுகள் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று பா.ம.க. தலைவர் ஜி.கே மணி எம்.எல்.ஏ. வேண்டுகோள் விடுத்துள்ளார்.
    தர்மபுரி:

    கொரோனா வைரஸ் 2-வது அலை கட்டுக்கடங்காமல் காட்டுத்தீபோல் பரவி அதிக பாதிப்பையும், சேதத்தையும் ஏற்படுத்தியிருப்பது கவலையளிக்கிறது. கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் தீவிர சிகிச்சையளித்து வரும் மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள், பாதுகாப்பு பணியில் இருக்கும் காவல் துறையினருக்கும் பாராட்டுகளையும், நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன். தொடர்ந்து அவர்கள் பாதுகாப்பாக பணியாற்ற வேண்டுமெனவும் கேட்டுக்கொள்கிறேன். கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் யாரும் எதிர்பாராத வண்ணம் அதிகரித்து வருகிறது.

    இதன் காரணமாக பென்னாகரம் அரசு மருத்துவமனை, தர்மபுரி மாவட்ட மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, மாவட்டத்தில் உள்ள மருத்துவமனைகள் மற்றும் சேலம், கிருஷ்ணகிரி மாவட்ட மருத்துவமனைகள், தலைநகர் சென்னை ராஜீவ்காந்தி அரசு தலைமை பொது மருத்துவமனை மற்றும் சென்னையில் உள்ள மருத்துவமனைகள் உள்ளிட்ட தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் படுக்கைகள் முழுமையாக நிரம்பிவிட்டன. கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளுக்கு செல்லும் நோயாளிக்களுக்கு படுக்கை வசதி இல்லை. ஆக்சிஜன் இல்லை என திருப்பி அனுப்பும் நிலை தொடங்கிவிட்டது. சாதாரண ஏழை, நடுத்தர குடும்பங்களை சேர்ந்தவர்கள் கூட கொரோனாவால் பாதிக்கப்பட்டு தங்கள் உடைமைகளை விற்றாவது உயிர் காப்பாற்றிக் கொள்ளலாமே என தனியார் மருத்துவமனைகள் சென்றாலும் அங்கேயும் படுக்கைகள் இல்லை, ஆக்சிஜன் இல்லை என்ற நிலையே நீடிக்கிறது.

    நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு நோயாளிகள் எண்ணிக்கை மிக, மிக அதிகரித்து வருவதே காரணம். இது மிகுந்த கவலையளிக்கிறது. கொரோனோ தொற்றில் இருந்து பொதுமக்களை காப்பாற்ற மத்திய, மாநில அரசுகள் இன்னும் அதிக கவனம் செலுத்த வேண்டும். கொரோனாவில் இருந்து பாதுகாப்பது தற்காப்பு நடவடிக்கையே ஆகும். எல்லோரிடமும் அதிக விழிப்புணர்வு வேண்டும். வெளியில் செல்வதைத் தவிர்த்தல், முககவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல், சோப்பு போட்டு கை கழுவுதல் உள்ளிட்ட தற்காப்பு நடவடிக்கைகளை பொதுமக்கள் பின்பற்ற வேண்டும் என வலியுறுத்திக்கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

    Next Story
    ×