search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    துரைமுருகன்
    X
    துரைமுருகன்

    இந்த முறை நீர்வளத்துறை அமைச்சர்... 10வது முறையாக சட்டப்பேரவைக்கு செல்லும் துரைமுருகன்

    திமுகவில் மூத்த தலைவராக அனைவரின் நன்மதிப்பையும் பெற்ற துரைமுருகன் மூன்று முறை பொதுப்பணித்துறை அமைச்சராக பதவி வகித்துள்ளார்.
    சென்னை:

    நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில், திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் காட்பாடி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி வாகை சூடி உள்ளார். இதன்மூலம் 10வது முறையாக அவர் எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். 

    வேலூர் மாவட்டம், காங்குப்பம் என்னும் ஊரில் பிறந்த துரைமுருகன், சென்னை சட்டக் கல்லூரியில் இளங்கலைமானி சட்டம் மற்றும் சென்னையில் உள்ள பச்சையப்பன் கல்லூரியில் முதுகலைமானி கல்வி பயின்று பட்டம் பெற்றார். 

    திமுகவின் தீவிர விசுவாசியாக, கட்சி தலைமையின் நம்பிக்கையை பெற்ற துரைமுருகன், முதன் முதலில் 1971இல் காட்பாடி தொகுதியில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன் பின்பு, ராணிப்பேட்டை தொகுதியில் 1977, 1980ல் நடந்த சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 

    துரைமுருகன்

    பின்னர் 1984ம் ஆண்டு மீண்டும் காட்பாடியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். அதைத் தொடர்ந்து 1989-ல் காட்பாடியில் மீண்டும் திமுக சார்பில் களம் இறங்கிய துரைமுருகன் வெற்றி பெற்றார். 1991ம் ஆண்டு காட்பாடி தொகுதியில் துரைமுருகன் தோல்வியடைந்தார். பின்னர் நடந்த அனைத்து தேர்தல்களிலும் அதாவது 1996, 2001, 2006, 2011, 2016 என்று தொடர்ந்து 5 முறை துரைமுருகன் வெற்றி பெற்றார். ஏற்கனவே 9 முறை காட்பாடியில் போட்டியிட்ட துரைமுருகன் 10வது முறையாக இந்த தடவை மீண்டும் காட்பாடியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். இதன்மூலம் 10வது முறையாக எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டு சட்டப் பேரவைக்கு செல்கிறார்.

    திமுகவில் மூத்த தலைவராக அனைவரின் நன்மதிப்பை பெற்ற துரைமுருகன் 1989-91, 1996-2001, 2006-2009 என மூன்று முறை பொதுப்பணித்துறை அமைச்சராக பதவி வகித்துள்ளார். 2009 முதல் 2011 வரை மற்றும் சட்டத்துறை அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார். 

    இந்த முறை மீண்டும் காட்பாடி தொகுதியில் வெற்றி பெற்றுள்ள துரைமுருகன், திமுக அமைச்சரவையில் நீர்வளத்துறை அமைச்சராக பதவியேற்க உள்ளார். அவருக்கு சிறுபாசனம் உள்ளிட்ட பாசனத் திட்டம், மாநில சட்டமன்றம், ஆளுநர் மற்றும் அமைச்சரவை, தேர்தல்கள் மற்றும் கடவுச்சீட்டுகள், கனிமங்கள் மற்றும் சுரங்கங்கள் ஆகிய துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. 
    Next Story
    ×