search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா தடுப்பூசி
    X
    கொரோனா தடுப்பூசி

    கோவைக்கு 32 ஆயிரம் தடுப்பூசிகள் வரவழைப்பு- இன்று மீண்டும் செலுத்தப்பட்டது

    கோவேக்சின் தடுப்பூசி 2-வது டோஸ் செலுத்த வேண்டியவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்க சுகாதார பணியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
    கோவை:

    இந்தியாவில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இதையடுத்து பொதுமக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள ஆர்வம்காட்டி வருகின்றனர். இதனிடையே கடந்த 1-ந்தேதி முதல் 18 வயது மேற்பட்டவர்களும் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்தது.

    ஆனால் தடுப்பூசிக்கு கடும் தட்டுப்பாடு நிலவுவதால் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கப்படவில்லை.

    இதனிடையே கூட்டம் காரணமாக கோவை அரசு ஆஸ்பத்திரியில் இருந்து கோவை அரசு கலைக்கல்லூரிக்கு தடுப்பூசி போடும் மையம் மாற்றப்பட்டது. ஆனால் நேற்றும் தடுப்பூசி விரைவில் தீர்ந்து விட்டது. இதையடுத்து 2-வது நாளாக கலைக்கல்லூரி நுழைவு வாயிலில் தடுப்பூசி தீர்ந்துவிட்டது குறித்த அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது. இதனால் தடுப்பூசி போட வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

    இந்தநிலையில் சென்னையில் இருந்து பல்வேறு மாவட்டங்களுக்கு கொரோனா தடுப்பூசி மருந்து பாட்டில்கள் அனுப்பும் பணி நடைபெற்று வருகிறது. அதன்படி கோவை மாவட்டத்திற்கு தேவையான தடுப்பூசி பாட்டில்கள் சேலத்தில் இருந்து வாகனம் மூலம் கோவைக்கு கொண்டு வரப்பட்டது.

    இதுகுறித்து சுகாதார துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    சேலத்தில் இருந்து 30 ஆயிரம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசி மற்றும் 2 ஆயிரம் டோஸ் கோவாக்சின் தடுப்பூசி மருந்துகள் கோவை வந்து உள்ளது. இதனை அரசு ஆஸ்பத்திரிகள், மாநகராட்சி நகர்ப்புற சுகாதார நிலையங்களுக்கு பிரித்து அனுப்பப்படும்.

    கோவேக்சின் தடுப்பூசி 2-வது டோஸ் செலுத்த வேண்டியவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்க சுகாதார பணியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இன்று முதல் மாவட்டத்தில் உள்ள அனைத்து மையங்களிலும் மீண்டும் கொரோனா தடுப்பூசி போடும் பணி முழு வீச்சில் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    ஆனால் 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்படுவது குறித்த எவ்வித தகவலும் இதுவரை வரவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×