search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பூக்கள்
    X
    பூக்கள்

    திண்டுக்கல்லில் பூக்கள் விலை கடும் வீழ்ச்சி

    கொரோனா பாதிப்புகளால் திண்டுக்கல்லில் பூக்கள் விலை கடும் வீழ்ச்சியடைந்துள்ளது.
    திண்டுக்கல்:

    திண்டுக்கல் அண்ணா வணிக வளாகத்தில் பூ மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. பல்வேறு கிராமங்களில் இருந்து கொண்டு வரப்படும் பூக்கள் இங்கு வியாபாரிகளால் வாங்கப்பட்டு அவை சில்லறை வியாபாரிகளுக்கு விற்பனை செய்யப்படும்.

    மேலும் வெளியூர் வியாபாரிகளும் இங்கு வந்து பூக்களை வாங்கிச் செல்வார்கள். இது மட்டுமின்றி மாலையாக தொடுத்து பல்வேறு நகரங்களுக்கும் அனுப்பி வைக்கப்படும்.

    தற்போது கொரோனா கட்டுப்பாடுகளால் கோவில் திருவிழா மற்றும் கலை நிகழ்ச்சிகளுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. திருமணம் போன்ற விசே‌ஷங்களும் கட்டுப்பாடுகளுடன் நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது.

    இதனால் பூ மார்க்கெட்டுக்கு கொண்டு வரப்படும் பூக்கள் குறைந்த அளவு விலையிலேயே வாங்கப்படுகிறது. வழக்கமாக கோடை காலத்தில் மல்லிகை, முல்லை, கனகாம்பரம், ரோஜா உள்ளிட்ட பூக்கள் விலை அதிகரித்து விற்பனையாகும். ஆனால் தற்போது கடும் வீழ்ச்சியடைந்ததால் பெரும்பாலான விவசாயிகள் பறிக்காமல் செடியிலேயே பூக்களை விட்டுள்ளனர்.

    ஒரு சில விவசாயிகள் கிடைத்த பணத்துக்கு விற்றுச் செல்கின்றனர். மேலும் பலர் போதிய விலை கிடைக்காமல் குப்பையில் வீசிச் செல்கின்றனர். அவ்வாறு குப்பையில் வீசும் பூக்களை பதப்படுத்தி சிலர் விற்பனைக்கு அனுப்பி வருகின்றனர்.

    மொத்தத்தில் கடந்த வருடத்தை போலவே இந்த வருடமும் பூக்கள் சாகுபடி செய்த விவசாயிகள் கண்ணீர் வடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது என தெரிவித்துள்ளனர். கோவில் விழாக்கள் மற்றும் விசே‌ஷ நிகழ்ச்சிகளுக்கு அனுமதி அளித்தால்தான் பூக்களின் தேவையும் அதிகரிக்கும். இல்லையெனில் பூ வியாபாரிகள் நஷ்டத்தை சந்திக்கும் நிலை ஏற்படும் என்று தெரிவித்தனர்.

    Next Story
    ×