search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஐகோர்ட் மதுரை கிளை
    X
    ஐகோர்ட் மதுரை கிளை

    நோய் எதிர்ப்பு சக்தியை கொல்லும் மதுவை இன்னும் விற்பது ஏன்?- மதுரை ஐகோர்ட் கேள்வி

    “மனிதர்களின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை கொல்லக்கூடிய மதுபானங்கள் விற்பனையை இன்னும் அனுமதிப்பது ஏன்?” என்று அரசுக்கு மதுரை ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியது.
    மதுரை:

    திருச்செந்தூரைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்தன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

    தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்றின் 2-ம் அலை தீவிரமாக பரவி வருவதால் கோவில்களில் தரிசனம், விழாக்கள் என மக்கள் அதிக அளவில் கூடும் நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. மதுக்கடைகளில் நிரம்பி வழியும் கூட்டத்தால் கொரோனா பரவல் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

    மது அருந்துவதால் வைரஸ்களை அழிக்க முடியாது. மது குடிப்பதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறையும் என்றும், கொரோனாவை தடுக்க கடுமையான நடவடிக்கைகளை அனைத்து நாடுகளும் எடுக்க வேண்டும் என்றும் உலக சுகாதார அமைப்பு தெரிவிக்கிறது. மேலும் கொரோனா தொற்றில் இருந்து பாதுகாக்கும் வகையில் பொது இடங்களில் ஒரு மீட்டர் இடைவெளியை அனைவரும் கண்டிப்பாக கடைபிடிக்கும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இந்த நடைமுறை டாஸ்மாக் கடைகளில் கடைபிடிக்கப்படுவது இல்லை.

    எனவே தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளையும் உடனடியாக மூட உத்தரவிட வேண்டும். மேலும் கொரோனா தொற்று பரவல் முழுமையாக குறையும் வரை டாஸ்மாக் கடைகளை திறக்க அனுமதிக்கக்கூடாது என்று மத்திய-மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு மனுவில் கூறி இருந்தார்.

    இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், புகழேந்தி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், “மனிதர்களின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை கொல்லக்கூடிய மதுபானங்கள் விற்பனையை இன்னும் அனுமதிப்பது ஏன்?” என்று கேள்வி எழுப்பினர்.

    முடிவில், இந்த வழக்கு குறித்து மத்திய-மாநில அரசுகள் பதில் அளிக்க உத்தரவிட்டு வழக்கை ஜூன் மாதம் 4-ந் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
    Next Story
    ×