search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அன்புமணி ராமதாஸ்
    X
    அன்புமணி ராமதாஸ்

    உடனடியாக சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டு: அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

    தமிழ்நாட்டில் இந்திய ஆட்சிப்பணி அதிகாரி தலைமையில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆணையத்தை அமைத்து, உடனடியாக சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று டாக்டர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
    சென்னை :

    பா.ம.க. இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    மராட்டிய மாநிலத்தில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் மராத்தா சமூகத்தினருக்கு 16 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது செல்லாது என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பளித்திருக்கிறது. அதற்காக சுப்ரீம் கோர்ட்டு கூறியிருக்கும் காரணங்கள் தமிழகத்தில் நடைமுறையில் இருக்கும் 69 சதவீத இட ஒதுக்கீட்டின் மீதும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும் என்பதால், தமிழக அரசு கூடுதல் விழிப்புடன் செயல்பட வேண்டும்.

    69 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு எதிரான வழக்கு கோடை விடுமுறைக்குப் பிறகு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ள நிலையில், உடனடியாக சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்தி, தமிழ்நாட்டில் இட ஒதுக்கீட்டுப் பிரிவினரின் எண்ணிக்கை குறித்த புள்ளிவிவரங்களை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யாவிட்டால், மராட்டியத்தைப் போலவே தமிழ்நாட்டிலும் இட ஒதுக்கீட்டை காக்க முடியாது.

    சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்தி தான் இட ஒதுக்கீட்டின் அளவை தீர்மானிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு 8 ஆண்டுகளுக்கு முன்பே ஆணையிட்டுள்ள நிலையில், அதற்கும் குறைவாக தமிழக அரசால் முன்வைக்கப்படும் எந்த ஆதாரத்தையும் சுப்ரீம் கோர்ட்டு ஏற்றுக் கொள்ளாது.

    எனவே, தமிழ்நாட்டில் இந்திய ஆட்சிப்பணி அதிகாரி தலைமையில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆணையத்தை அமைத்து, உடனடியாக சாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தி, அதன் அடிப்படையில் தமிழகத்தில் ஒவ்வொரு சமூகத்திற்கும் இட ஒதுக்கீட்டின் அளவை தீர்மானிக்க வேண்டும். அதை சுப்ரீம் கோர்ட்டில் தற்போது நடைபெற்று வரும் வழக்கு விசாரணையின் போது தெரிவித்து 69 சதவீத இட ஒதுக்கீட்டை பாதுகாக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    Next Story
    ×