search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நாசரேத் ரெயில் நிலைய சாலையில் தேங்கி கிடக்கும் தண்ணீர்
    X
    நாசரேத் ரெயில் நிலைய சாலையில் தேங்கி கிடக்கும் தண்ணீர்

    நெல்லை, தென்காசி, தூத்துக்குடியில் பரவலாக மழை

    தூத்துக்குடி மாவட்டத்தில் நாசரேத், எட்டயபுரம் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. அதிகபட்சமாக எட்டயபுரத்தில் 3 மில்லி மீட்டர் மழை பெய்தது.
    நெல்லை:

    நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கோடை மழை தொடர்ந்து பெய்து வருகிறது. பகலில் வெயில் வாட்டி வதைத்து வந்தாலும் மாலை நேரங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.

    நெல்லையில் சேரன் மகாதேவி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே பரவலாக மழை பெய்து வருகிறது. அம்பை, ராதாபுரம், வள்ளியூர், பணகுடி பகுதிகளிலும் நேற்று மாலை விட்டுவிட்டு மழை பெய்தது.

    அணை பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது. நம்பியாறு அணையில் அதிகபட்சமாக 15 மில்லிமீட்டரும், கொடுமுடியாறு அணை பகுதியில் 10 மில்லிமீட்டரும் மழை பதிவாகியது.

    தற்போது நிலவரப்படி 22.96 அடி கொள்ளளவு கொண்ட நம்பியாறில் 12.53 அடி நீர் இருப்பு உள்ளது. மாவட்டத்தின் பாசனம் மற்றும் குடிநீர் தேவைக்கு பிரதான அணையாக விளங்கும் பாபநாசம் அணையில் 102.10 அடி நீர் இருப்பு உள்ளது.

    அணையில் இருந்து வினாடிக்கு 254.75 கனஅடி நீர் பாசனத்திற்காக வெளியேற்றப்படுகிறது. மணிமுத்தாறு அணையிலும் 250 கனஅடி நீர் பெருங்கால் பாசனத்திற்காக நீர் திறக்கப்படுகிறது. அணையில் தற்போது 88.05 அடி நீர் இருப்பு உள்ளது.

    தென்காசி மாவட்டத்தில் கோடை மழை பல்வேறு இடங்களில் கொட்டி தீர்த்து வருகிறது. நேற்றும் தென்காசி, செங்கோட்டை, சங்கரன்கோவில், சிவகிரி உள்ளிட்ட இடங்களில் மழை பெய்தது.

    மாலையில் குளிர்ந்த காற்றுடன் தொடங்கிய மழை சுமார் 1 மணி நேரம் கொட்டி தீர்த்தது. சங்கரன்கோவில் பகுதியில் இடி-மின்னலுடன் 1 மணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்தது. இன்று காலை நிலவரப்படி அதிகபட்சமாக அங்கு 7 செ.மீ மழை பதிவாகி உள்ளது. தென்காசியில் 6.2 மில்லி மீட்டரும், சிவகிரியில் 6 மில்லி மீட்டரும், செங்கோட்டையில் 4 மில்லி மீட்டரும் மழை பெய்தது.

    அணை பகுதிகளை பொறுத்தவரை 84 அடி கொண்ட ராமநதியில் 56.50 அடி நீர் இருப்பு உள்ளது. நேற்று அந்த பகுதியில் 5 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. கடனா அணையில் 66.80 அடியும், கருப்பாநதியில் 49.87 அடியும் நீர் இருப்பு உள்ளது.

    மிக சிறிய அணையான குண்டாறு அணையில் 28.50 அடி அடி நீர் இருப்பு உள்ளது. 132 அடி கொள்ளளவு கொண்ட அடவிநயினார் அணையில் 11 அடி மட்டுமே நீர் இருப்பு உள்ளது.

    தூத்துக்குடி மாவட்டத்திலும் நாசரேத், எட்டயபுரம் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. அதிகபட்சமாக எட்டயபுரத்தில் 3 மில்லி மீட்டர் மழை பெய்தது.

    நாசரேத் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளான பிரகாசபுரம், மூக்குப்பீறி உள்ளிட்ட இடங்களில் கடந்த சில மாதங்களாக கடுமையான வெயில் அடித்து வந்தது. பொதுமக்கள் வெளியே செல்ல முடியாமல் அவதிப்பட்டனர்.

    இந்த நிலையில் நேற்று மதியம் நாசரேத் மற்றும் சுற்றுப்பகுதிகளில் திடீரென்று ½ மணி நேரம் பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் தேங்கியது.

    வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழ்நிலை நிலவியது. இதனால் அப்பகுதி மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
    Next Story
    ×