search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முக ஸ்டாலின்
    X
    முக ஸ்டாலின்

    மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழகத்தில் அடுத்தடுத்து அரங்கேறப்போகும் காட்சிகள் என்னென்ன?

    தமிழகத்தில் தி.மு.க. கட்சி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து முதல்-அமைச்சராக அந்தக் கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் பதவி ஏற்பதற்கான நடைமுறைகள், அடுத்தடுத்து அரங்கேற உள்ளன.
    சென்னை :

    தமிழகத்தில் 234 சட்டமன்ற தொகுதிகளில் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. இதில் நேற்று பிற்பகல் நிலவரப்படி ஆளும் கட்சியான அ.தி.மு.க. தோல்வி முகத்தில் உள்ளது. எதிர்க்கட்சியாக இருந்த தி.மு.க., 124 தொகுதிகளில் முன்னிலை பெற்று தனிப் பெரும்பான்மையாக வெற்றி பெறும் நிலையை அடைந்துள்ளது.

    எனவே அடுத்த அரசை உருவாக்கும் பொறுப்பு தி.மு.க. வசம் உள்ளது. அதற்காக, வெற்றிச் சான்றிதழ் பெற்ற அனைத்து தி.மு.க. எம்.எல்.ஏ.க்கும் அக்கட்சியின் தலைமையகம் அழைப்பு விடுக்கும். அவர்கள் குறிப்பிட்ட இடத்தில் கூடி, தங்களின் சட்டமன்ற கட்சித் தலைவராக மு.க.ஸ்டாலினை தேர்வு செய்வார்கள். அவர்தான் முதல்-அமைச்சராக அரியணை ஏறுவார்.

    அதுபோல் அ.தி.மு.க. கட்சியில் வெற்றி பெற்று சான்றிதழ் பெற்ற எம்.எல்.ஏ.க்கள் தங்களின் கட்சித் தலைமையில் அழைப்பின்படி ஓரிடத்தில் கூடுவார்கள். அங்கு தங்கள் கட்சிக்கான சட்டமன்ற கட்சித் தலைவரை அவர்கள் தேர்வு செய்வார்கள். அவரே எதிர்கட்சித் தலைவராக இருப்பார்.

    இதற்கிடையே தோல்வியை தழுவியதால், முதல்-அமைச்சர் பதவியில் இருந்து ராஜினாமா செய்வதற்கான கடிதத்தை கவர்னர் பன்வாரிலால் புரோகித்திடம் எடப்பாடி பழனிசாமி வழங்குவார். புதிய அரசு பதவி ஏற்கும்வரை காபந்து அரசாக செயல்படும்படி அவரை கவர்னர் கேட்டுக்கொள்வார்.

    இந்த நிலையில் வெற்றி பெற்ற எம்.எல்.ஏ.க்களின் பட்டியலைக் கொண்டுபோய் கவர்னரிடம் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கொடுப்பார். தங்களுக்கு ஆட்சி அமைக்கும் பெரும்பான்மை இருப்பதால் ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்க வேண்டும் என்று உரிமை கோருவார்.

    அதைத் தொடர்ந்து தி.மு.க.வை ஆட்சி அமைக்க கவர்னர் அழைப்பு விடுப்பார். அப்போது தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், முதல்-அமைச்சரான தனது தலைமையில் அமையும் அமைச்சரவையின் பட்டியலைக் கொண்டு போய் கவர்னரிடம் கொடுப்பார். அதைத் தொடர்ந்து அமைச்சரவை பதவி ஏற்கும் நாள், நேரம், இடம் பற்றி கவர்னர் கேட்டறிவார்.

    மு.க.ஸ்டாலின் கூறும் நாள், இடம், நேரத்தில், முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர் பட்டியலில் இடம் பெற்றவர்களுக்கு பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைப்பார்.

    அதைத் தொடர்ந்து தற்காலிக சபாநாயகராக யார் தேர்வு செய்யப்பட வேண்டும்? என்பதை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் கேட்டறிந்து அறிவிக்கப்படும். தற்காலிக சபாநாயகராக தேர்வு செய்யப்படுபவர் கவர்னரிடம் சென்று பதவி ஏற்றுக்கொள்வார்.

    பின்னர்் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் அனைவரும் குறிப்பிட்ட நாளில் சட்டசபைக்கு வந்து எம்.எல்.ஏ.யாக பதவி ஏற்கும்படி அழைப்பு விடுக்கப்படும். அதைத் தொடர்ந்து 234 எம்.எல்.ஏ.க்களும் சட்டசபைக்கு வருவார்கள். அவர்களுக்கு தற்காலிக சபாநாயகர் பதவிப் பிரமாணம் செய்து வைப்பார். நாடாளுமன்றத்தில் ஏற்கனவே சட்டம் நிறைவேற்றப்பட்டு இருப்பதால், தமிழக சட்டசபையில் ஆங்கிலோ இந்தியன் யாரும் நியமன உறுப்பினராக நியமனம் செய்யப்பட மாட்டார்.

    பின்னர், புதிய சபாநாயகர் யார்? என்பதை ஆளும் கட்சி அறிவிக்கும். அந்தப் பதவிக்கு வேறு யாரும் போட்டியிடாத நிலையில், சட்டசபையில் சபாநாயகரை அவை முன்னவரும், எதிர்க்கட்சித் தலைவரும் இணைந்து சபாநாயகர் இருக்கையில் அமர்த்துவார்கள். அதைத் தொடர்ந்து புதிய அரசு தனது இயல்பான செயல்பாட்டைத் தொடர்ந்து நடத்தும்.

    கடந்த பிப்ரவரி மாதத்தில் அ.தி.மு.க. அரசு இடைக்கால நிதிநிலை அறிக்கையை (பட்ஜெட்) தாக்கல் செய்தது. வரும் அக்டோபர் மாதம் வரை இடைக்கால பட்ஜெட் அமலில் இருக்கும். எனவே அதற்கான காலகட்டம் முடிவதற்குள் சட்டசபை கூட்டப்பட்டு, முழு பட்ஜெட்டை புதிய அரசு தாக்கல் செய்யும்.
    Next Story
    ×