search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னை மாநகர பஸ்
    X
    சென்னை மாநகர பஸ்

    சென்னை மாநகர பஸ் பயணிகள் எண்ணிக்கை 14 லட்சமாக குறைந்தது

    கொரோனாவுக்கு முன்பு வரை 33 லட்சம் பயணிகள் பயணம் செய்தனர். தற்போது அது 14 லட்சமாக குறைந்துள்ளது. இதனால் மாநகர போக்குவரத்து கழகத்துக்கு தினமும் 2¼ கோடி இழப்பு ஏற்பட்டு வருகிறது.
    சென்னை:

    சென்னை மக்களின் அடிப்படை போக்குவரத்து மையமாக மாநகர பஸ்கள் செயல்படுகின்றன. கொரோனா பாதிப்புக்கு முன்பு வரை மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் 3,300 பஸ்கள் இயக்கப்பட்டன.

    தினமும் பல்வேறு வழித்தடங்களில் இயக்கப்பட்ட இந்த பஸ்களில் 33 லட்சம் பேர் பயணம் செய்தனர். இதன் மூலம் போக்குவரத்து கழகத்துக்கு ரூ.3½ கோடி வருவாய் கிடைத்தது.

    இந்தநிலையில் கடந்த ஆண்டு கொரோனா தொற்று பரவி பாதிப்பை ஏற்படுத்தியது. இதனால் பொதுமக்கள் மிகவும் குறைவாகவே பயணம் செய்தனர். இதனைத்தொடர்ந்து பஸ் களின் எண்ணிக்கையும் குறைக்கப்பட்டது. அதில் 21 லட்சம் பேர் பயணம் செய்தனர். கொரோனா தொற்று குறைந்ததும் படிப்படியாக பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து வந்த நிலையில் மீண்டும் தொற்று பரவியதால் பஸ் போக்குவரத்துக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.

    கொரோனா வைரஸ்

    பள்ளி, கல்லூரிகள், ஐ.டி. நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டதால் மாணவர்கள், பணியாளர்கள் வீடுகளில் முடங்கி உள்ளனர். தொற்று தீவிரமாக பரவுவதால் பொதுமக்கள் பஸ் பயணத்தை தவிர்க்கிறார்கள்.

    இதனால் பெரும்பாலான பஸ்கள் காலியாக ஓடுகின்றன. காலை மற்றும் மாலை நேரங்களில் மட்டும் கூட்டம் உள்ளது. இதன் காரணமாக மாநகர போக்குவரத்து கழகத்துக்கு வருவாய் இழப்பு மேலும் அதிகரித்துள்ளது.

    தற்போது 14 லட்சம் பயணிகள் பயணம் செய்து வருகிறார்கள். கொரோனா தொற்று பயம், கட்டுப்பாடு காரணமாக பயணிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது.

    இதுகுறித்து மாநகர போக்குவரத்து கழக அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    கொரோனாவுக்கு முன்பு வரை 33 லட்சம் பயணிகள் பயணம் செய்தனர். தற்போது அது 14 லட்சமாக குறைந்துள்ளது. இதனால் மாநகர போக்குவரத்து கழகத்துக்கு தினமும் 2¼ கோடி இழப்பு ஏற்பட்டு வருகிறது.

    தற்போது பஸ் போக்குவரத்து மூலம் ரூ.1¼ கோடி வருவாய் கிடைக்கிறது. 2,900 பஸ்கள் இயக்கப்படுகின்றன. பகல் நேரங்களில் கூட்டம் இல்லாததால் சேவை குறைக்கப்படுகிறது. வருவாய் இழப்பு ஏற்பட்டாலும் பொதுமக்கள் நலன் கருதி பஸ்கள் தொடர்ந்து இயக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×