search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா தடுப்பூசி மையத்தில் நேற்று போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்த போது எடுத்த படம்.
    X
    கொரோனா தடுப்பூசி மையத்தில் நேற்று போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்த போது எடுத்த படம்.

    போலீஸ் பாதுகாப்புடன் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி

    கொரோனா வைரசை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில் கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு கடந்த ஜனவரி மாதம் 16-ந் தேதியில் இருந்து போடப்பட்டு வருகிறது
    திருப்பூர்:

    திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் போலீஸ் பாதுகாப்புடன் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. தள்ளு-முள்ளு ஏற்பட்ட நிலையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    கொரோனா வைரசை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில் கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு கடந்த ஜனவரி மாதம் 16-ந் தேதியில் இருந்து போடப்பட்டு வருகிறது. திருப்பூர் மாவட்டத்தில் அரசு ஆஸ்பத்திரி உள்பட 9 அரசு ஆஸ்பத்திரிகள் மற்றும் 13 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 3 மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்கள், இதுதவிர தனியார் ஆஸ்பத்திரிகள் 25-க்கும் மேற்பட்டவை என மாவட்டம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

    கடந்த மாதம் வரை கொரோனா தடுப்பூசி போட வருகிறவர்களின் எண்ணிக்கை குறைவாகவே இருந்தது. ஆனால் கடந்த ஒரு மாதமாக மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்து கொண்டிருக்கிறது. இதன் காரணமாக கொரோனா தடுப்பூசி போட வருகிற பொதுமக்கள் ஆர்வம் காட்டி வந்து கொண்டிருக்கிறார்கள்.

    இதனால் காலையிலேயே பலரும் அரசு ஆஸ்பத்திரிகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் முன்பு நீண்ட வரிசையில் காத்து நின்று பொதுமக்கள் தடுப்பூசி போட்டு வருகிறார்கள். இதற்கிடையே பலரும் தடுப்பூசி போட வருவதால் ஒரு சில இடங்களில் தடுப்பூசி தட்டுப்பாடும் ஏற்பட்டு வருகிறது. அப்போது அங்கு பொதுமக்கள் டாக்டர்கள் மற்றும் செவிலியர்களுடன் வாக்குவாதத்திலும் ஈடுபட்டு வருகிறார்கள். இதுபோல் பலர் வரிசையில் நிற்பதால் பொதுமக்களிடையே தள்ளு-முள்ளும் ஏற்படுகிறது. திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் நேற்று முன்தினம் கடுமையான தள்ளு-முள்ளு ஏற்பட்டது.

    எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தற்போது திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் போலீஸ் பாதுகாப்புடன் பொதுமக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. முதலாக வருகிறவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு தடுப்பூசி போடப்படுகிறது. போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதால் அரசு டாக்டர்கள், செவிலியர்கள் எந்த ஒரு சிரமமும் இன்றி பணியாற்றி வருகிறார்கள்.
    Next Story
    ×