search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    தேனி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் அருகே தொழிலாளி தீக்குளித்து தற்கொலை

    தேனி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் அருகே, நிலப்பிரச்சினையில் பட்டப்பகலில் தச்சுத்தொழிலாளி பெட்ரோல் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்தார்.
    தேனி:

    தேனி பங்களாமேடு பகுதியை சேர்ந்தவர் முருகன் (வயது 60). தச்சுத்தொழிலாளி. இவர் திருமணம் செய்து கொள்ளவில்லை. இவருக்கு 3 சகோதரர்களும், ஒரு சகோதரியும் உள்ளனர்.

    முருகனுக்கு சொந்தமான நிலம் தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் பின்புறம் உள்ளது. அந்த நிலத்தை விற்பனை செய்வது தொடர்பாக பிரச்சினை இருந்து வந்தது. இதனால் அவர் மனம் உடைந்து காணப்பட்டார்.

    நேற்று பகல் 11 மணியளவில் அவர் தனக்கு சொந்தமான நிலத்துக்கு அருகில் உள்ள காலியிடத்துக்கு ஒரு பாட்டிலில் பெட்ரோலுடன் சென்றார். அங்கு ஆட்கள் நடமாட்டம் இல்லாததால் அந்த இடத்தில் வைத்து தனது உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்தார். இதில் அவருடைய உடல் முழுவதும் தீப்பற்றி எரிந்தது.

    தீக்குளித்த காலி இடத்தில் செடிகள் வளர்ந்து காய்ந்த நிலையில் இருந்ததால் அந்த இடத்திலும் தீப்பற்றியது. இதனிடையே சற்று தொலைவில் உள்ள வீடுகளில் வசிப்பவர்கள் தீப்பற்றி எரிவதை பார்த்து தேனி தீயணைப்பு நிலையத்துக்கும், தேனி போலீஸ் நிலையத்துக்கும் தகவல் கொடுத்தனர். ஆனால் போலீசார் அங்கு வருவதற்குள் முருகன் தீயில் கருகி உயிரிழந்து கரிக்கட்டையாக கிடந்தார். மேலும் அங்கு வந்த தீயணைப்பு படையினர் ஆங்காங்கே காய்ந்த செடிகளில் எரிந்த தீயை அணைத்தனர்.

    தீக்குளித்த இடத்துக்கு அருகில் ஒரு சைக்கிள் இருந்தது. அந்த சைக்கிளில் ஒரு கடிதம் எழுதி வைக்கப்பட்டு இருந்தது. விசாரணையில் அது முருகனின் சைக்கிள் என்பதும், அந்த அவர் சாகும் முன்பு கடிதம் எழுதி வைத்து இருந்தது என்றும் தெரியவந்தது. பின்னர் முருகனின் உறவினர்களுக்கு போலீசார் தகவல் கொடுத்தனர். அவருடைய தம்பிகள் மற்றும் உறவினர்கள் அங்கு வந்து பிணத்தை பார்த்து கதறி அழுதனர்.

    பின்னர் ஆம்புலன்ஸ் மூலம் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. சம்பவ இடத்தில் இருந்து போலீசார் கைப்பற்றிய கடிதத்தில், தனது நிலத்தை விற்பனை செய்வதில் ஏற்பட்ட பிரச்சினையால் தீக்குளித்ததாகவும், அதற்கு காரணமான நபர் குறித்தும் எழுதி இருந்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து அவருடைய தம்பி ஜவஹர் கொடுத்த புகாரின்பேரில் தேனி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, "முருகன் தனக்கு சொந்தமான நிலத்தை விற்க முயன்றார். அதை வாங்க முயன்ற நபர் ரூ.50 ஆயிரம் முன்பணம் கொடுத்ததாக கூறப்படுகிறது. பின்னர் அந்த நபர் நிலத்தை வாங்காமல் இழுத்தடித்ததால் வேறு ஒரு நபருக்கு நிலத்தை விற்பனை செய்ய முடிவு செய்தார். இந்தநிலையில், முன்பணம் கொடுத்த நபர் நோட்டீஸ் அனுப்பி உள்ளார். அதில் கொடுத்த முன்பணத்தை விட அதிக பணம் கொடுத்ததாக குறிப்பிடப்பட்டு இருந்தது. இதனால் அவர் மனம் உடைந்து தற்கொலை செய்து இருப்பதாக தெரியவருகிறது" என்றார்.

    பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவம் தேனியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
    Next Story
    ×