search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    திண்டுக்கல் அருகே போலீஸ் எனக்கூறி லாரி டிரைவரிடம் பணம் பறித்த வாலிபர் கைது

    திண்டுக்கல் அருகே போலீஸ் எனக்கூறி லாரி டிரைவரிடம் பணம் பறித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

    கொடைரோடு:

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி பராசக்தி காலனியை சேர்ந்தவர் சித்திக்(30). இவர் சரக்கு வேன் டிரைவராக உள்ளார். கடந்த 23-ந்தேதி சரக்குகளை வேனில் ஏற்றிக்கொண்டு திண்டுக்கல்-மதுரை 4 வழிச்சாலையில் வந்து கொண்டிருந்தார். பள்ளபட்டி அருகே வந்தபோது அவரை வழிமறித்த ஒரு வாலிபர் குடிபோதையில் வேனை ஓட்டுகிறாயா என மிரட்டியுள்ளார்.

    போலீஸ் உடையில் இருந்ததால் அவரிடம் சித்திக் தான் குடிக்கவில்லை என்றும், முறையாக வண்டி எடுத்து வருவதாகவும் கூறினார். இருந்தபோதும் விடாமல் ரூ.5000 கொடுத்தால்தான் வண்டியை எடுக்கவிடுவேன் என மிரட்டியுள்ளார். இதனையடுத்து அவரது செல்போன் எண்ணுக்கு கூகுள்பே மூலம் ரூ.5000 அனுப்பியுள்ளார்.

    இதனை சித்திக் வீடியோவும் எடுத்து வைத்துக்கொண்டார். இருந்தபோதும் அவர் மீது சந்தேகம் ஏற்பட்டதால் இதுகுறித்து திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் அளித்தார்.

    எஸ்.பி உத்தரவின்பேரில் அம்மையநாயக்கனூர் சப்-இன்ஸ்பெக்டர் மைக்கேல்டேவிட் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினார். இதில் கந்தப்பகோட்டையை சேர்ந்த தவமணி(29) என்பவர்தான் சித்திக்கிடம் பணம் பறித்தது என தெரியவந்தது. இவர் கடந்த வருடம் வரை போலீஸ் நண்பர்கள் குழுவில் இணைந்து வாகனசோதனையில் போலீசாருக்கு உதவியாக இருந்துள்ளார்.

    தற்போது வேலை இல்லாத நிலையில் இதுபோல வழிப்பறியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனையடுத்து தவமணியை கைது செய்த போலீசார் வேறுயாரிடமாவது இதேபோன்ற வழிப்பறியில் பணம் பறித்துள்ளாரா என்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×