search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா தடுப்பூசி
    X
    கொரோனா தடுப்பூசி

    1.50 கோடி கொரோனா தடுப்பூசிகள் கொள்முதல்- தமிழக அரசு உத்தரவு

    நாடு முழுவதும் 18 வயதுக்கும் மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடும் பணி வருகிற 1-ந் தேதி தொடங்கும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. தடுப்பூசி போடுவதற்கான முன்பதிவு இன்று மாலை 4 மணிமுதல் தொடங்குகிறது.
    சென்னை:

    தமிழகத்தில் கொரோனா தொற்றின் 2-வது அலை மிக வேகமாக பரவி வருகிறது. கடந்த ஜனவரி மாதம் வரை தமிழகத்தில் கொரோனா கட்டுக்குள் இருந்தது. அதன் பிறகு தமிழகத்தில் தேர்தல் காரணமாக தொண்டர்கள் பல்வேறு இடங்களில் கூடியதால் கொரோனா பரவல் அதிகரிக்க தொடங்கியது.

    கடந்த மாதம் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வந்த நிலையில் இந்த மாதத்தில் கொரோனா பாதிப்பு உச்சத்தை தொட்டது.

    தமிழகத்தில் தற்போது தினமும் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். சென்னையில் தினமும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4 ஆயிரத்துக்கும் மேல் பதிவாகிறது. தமிழகத்தில் இதுவரை 2 கோடியே 18 லட்சத்து 80 ஆயிரத்து 233 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

    இதில் 11 லட்சத்து 13 ஆயிரத்து 502 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை 6 லட்சத்து 72 ஆயிரத்து 280 ஆண்களும், 4 லட்சத்து 41 ஆயிரத்து 184 பெண்களும், திருநங்கைகள் 38 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    நேற்று மட்டும் கொரோனாவுக்கு 77 பேர் பலியாகி உள்ளனர். கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று 14 ஆயிரத்து 43 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

    கொரோனா பரவலை தடுக்க கடந்த ஜனவரி மாதம் 16-ந் தேதி முதல் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்தியாவில் கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகிய 2 தடுப்பூசிகள் போடப்படுகின்றன. முதல் கட்டமாக டாக்டர்கள் உள்ளிட்ட முன்களப் பணியாளர்களுக்கு தடுப்பூசிகள் போடப்பட்டன.

    அதன் பிறகு 60 வயதைக் கடந்த முதியவர்களுக்கும், நாள்பட்ட நோயாளிகளுக்கும் தடுப்பூசி போடப்பட்டது. தற்போது 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

    நாடு முழுவதும் 18 வயதுக்கும் மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடும் பணி வருகிற 1-ந் தேதி தொடங்கும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. தடுப்பூசி போடுவதற்கான முன்பதிவு இன்று மாலை 4 மணிமுதல் தொடங்குகிறது.

    ‘கோவின்’ இணையதளம், செயலி மற்றும் ஆரோக்கிய சேது செயலியில் முன்பதிவு செய்து தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. தமிழகத்திலும் வருகிற 1-ந் தேதி முதல் 18 வயதுக்கும் மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்படுகிறது. இதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது.

    தமிழகத்தில் 18 வயது முதல் 44 வயது வரை சுமார் 3½ கோடி பேர் உள்ளனர். அவர்களுக்கு வருகிற 1-ந் தேதி (மே) முதல் தடுப்பூசி போடப்படுகிறது. அவர்களுக்கு தடுப்பூசி இலவசமாக போடப்படும் என்று தமிழக அரசு ஏற்கனவே கூறி இருக்கிறது. இதற்காக 1.50 கோடி டோஸ் தடுப்பூசிகளை தமிழக அரசு கொள்முதல் செய்கிறது.

    தமிழக அரசு

    இதுதொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    இந்தியாவிலேயே அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என ஏற்கனவே அறிவித்த முதல் மாநிலம் தமிழ்நாடு. கொரோனா நோய் தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில், அதனை கட்டுப்படுத்த தடுப்பூசி போடும் பணிகள் தமிழ்நாடு அரசால் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.

    தற்போது 45 வயதிற்கு மேற்பட்ட நபர்களுக்கு செலுத்தப்பட்டு வரும் இலவச தடுப்பூசி பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. நேற்று வரை 55.51 லட்சம் நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

    மேலும், வரும் மே 1-ந் தேதி முதல் 18 வயதிற்கு மேல் 44 வயது வரை உள்ளவர்களுக்கு ஏற்கனவே அறிவித்தவாறு, இலவசமாக தடுப்பூசி போட்டுக்கொள்ள முதல்-அமைச்சரின் உத்தரவின் பேரில் தேவையான முன்னேற்பாட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

    இதற்கென, முதற்கட்டமாக 1.50 கோடி தடுப்பூசிகள் தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம் மூலமாக கொள்முதல் செய்து வழங்குவதற்கு தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×