search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் படுக்கைகளில் ஆக்சிஜன் வசதி ஏற்படுத்தப்பட்டு வருவதை படத்தில் காணலாம்.
    X
    தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் படுக்கைகளில் ஆக்சிஜன் வசதி ஏற்படுத்தப்பட்டு வருவதை படத்தில் காணலாம்.

    தமிழகத்தில் போர்க்கால அடிப்படையில் 12,370 ஆக்சிஜன் படுக்கை வசதிகள்- பொதுப்பணித்துறை தீவிரம்

    கொரோனா 2-வது அலையை எதிர்கொள்ள தமிழகத்தில் உள்ள மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரி உள்ளிட்ட அனைத்து ஆஸ்பத்திரிகளிலும் கூடுதலாக 12 ஆயிரத்து 370 ஆக்சிஜன் படுக்கை வசதிகளை போர்க்கால அடிப்படையில் பொதுப்பணித்துறை அமைத்து வருகிறது.
    சென்னை:

    தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா முதல் அலை வந்த போது மாநிலம் முழுவதும் உள்ள அரசு மருத்துவக்கல்லூரிகள் மற்றும் ஆஸ்பத்திரிகள், மாவட்ட தலைமை ஆஸ்பத்திரிகள், தாலுகா அரசு பொது ஆஸ்பத்திரிகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஆகிய 138 ஆஸ்பத்திரிகளில் ரூ.282.51 கோடி மதிப்பில் 27 ஆயிரத்து 806 படுக்கை வசதிகள் மற்றும் தீவிர சிகிச்சைப் பிரிவு, தனிமைப்படுத்தும் வார்டுகள் மற்றும் இதர சுகாதார வசதிகள் ஏற்படுத்தும் பணிகள், பொதுப்பணித்துறையால் (கட்டிடம்) அவசரகால பணியாக மேற்கொள்ளப்பட்டது. இதில் 21 ஆயிரத்து 692 படுக்கைகளுக்கு ஆக்சிஜன் இணைப்புகள் வழங்கப்பட்டன.

    அதுபோலவே தற்போது 2-ம் அலையை எதிர்கொள்ளவும், பொதுமக்களுக்கு தரமான மருத்துவ சிகிச்சை வழங்கவும் அனைத்து ஆஸ்பத்திரிகளிலும் கூடுதலாக 12 ஆயிரத்து 370 ஆக்சிஜன் இணைப்புகளுடன் கூடிய படுக்கை வசதிகள் அமைக்க அரசு அறுவுறுத்தலின் பேரில் பொதுப்பணித்துறையால் (கட்டிடம்) போர்க்கால அடிப்படையில் பணிகள் நடைபெற்று வருகின்றன.

    சென்னையில் உள்ள ஆஸ்பத்திரிகளுக்கு மட்டும் கடந்த ஆண்டு 2 ஆயிரத்து 912 ஆக்சிஜன் இணைப்புடன் கூடிய படுக்கை வசதிகள் செய்யப்பட்டன. இத்துடன் கூடுதலாக இவ்வாண்டு 2 ஆயிரத்து 895 ஆக்சிஜன் இணைப்புடன் கூடிய படுக்கை வசதிகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

    சென்னையைப் பொருத்தவரை கூடுதல் ஆக்சிஜன் இணைப்புகளுடன் கூடிய படுக்கை வசதிகள், ராஜீவ்காந்தி அரசு பொது ஆஸ்பத்திரியில் 550, அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் 500, எழும்பூரில் உள்ள அரசு பெண்கள் மற்றும் குழந்தைகள் ஆஸ்பத்திரியில் 225, கிண்டியில் உள்ள கிங்ஸ் இன்ஸ்டிடியூட் 200, சென்னையில் உள்ள இதர சுற்றுவட்டார 11 ஆஸ்பத்திரிகளில் 1,420 கூடுதல் ஆக்சிஜன் இணைப்புகளுடன் கூடிய படுக்கைகள் அமைக்கும் பணிகள் துரிதமாக நடந்து வருகிறது.

    கோப்புப்படம்

    செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் கூடுதலாக 434 ஆக்சிஜன் படுக்கை வசதிகள், திருச்சி மாவட்டத்தில் 585, தஞ்சாவூர் மாவட்டத்தில் 583, கோவை மாவட்டத்தில் 311, மதுரை மாவட்டத்தில் 225 மற்றும் நெல்லை மாவட்டத்தில் 325 மற்றும் பிற மாவட்டங்களில் கூடுதலாக 7 ஆயிரத்து 12 ஆக்சிஜன் இணைப்புகளுடன் கூடிய படுக்கை வசதிகளும் அமைக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் மருத்துவ துறையை சார்ந்த மருத்துவர்கள், மாவட்ட கலெக்டர்கள் மற்றும் பொதுப்பணித்துறை என்ஜினீயர்கள் ஆகியோர் நாள்தோறும் கலந்து ஆலோசித்து 2-ம் அலையை எதிர்கொள்ள தேவையான அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளையும் பொதுப்பணித்துறை தீவிரமாகவும், துரிதமாகவும் செய்து வருகிறது.

    மேற்கண்ட தகவல்களை தமிழக அரசு பிறப்பித்துள்ள செய்திக்குறிப்பில் கூறி உள்ளது.
    Next Story
    ×