search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சங்கரன்கோவில் பகுதியில் சாலையில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளம்.
    X
    சங்கரன்கோவில் பகுதியில் சாலையில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளம்.

    தென்காசி மாவட்டத்தில் மீண்டும் கோடை மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி

    கடந்த ஒரு மாதமாக வெயில் சுட்டெரித்து வரும் நிலையில் தென்காசி மாவட்டத்தில் பரவலாக பெய்த மழையால் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
    சங்கரன்கோவில்:

    நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கடந்த சில நாட்களாகவே மாலையில் கோடை மழை பெய்தது. ஆனால் கடந்த 2 நாட்களாக மழை ஓய்ந்த நிலையில் நேற்று மாலை மீண்டும் தென்காசியில் திடீரென மழை பெய்தது.

    தென்காசி நகர் பகுதி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான வடகரை, அச்சன்புதூர், கடையநல்லூர், இடைகால், சொக்கம்பட்டி, பண்பொழி, இலத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழை பெய்தது. ஒரு சில இடங்களில் மின்னலுடன் கூடிய மழையும் பெய்தது.

    இதில் வடகரை பகுதியில் மின்னல் தாக்கியதில் ஒரு வீட்டின் தென்னை மரம் தீப்பற்றி எரிந்தது. இந்த திடீர் மழையால் தென்காசி மாவட்ட மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். சங்கரன்கோவில் நகர் பகுதியில் மாலையில் சுமார் அரை மணி நேரம் இடி-மின்னலுடன் மழை கொட்டித்தீர்த்தது. செங்கோட்டையிலும் லேசான மழை பெய்தது.

    இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. கடந்த ஒரு மாதமாக வெயில் சுட்டெரித்து வரும் நிலையில் தென்காசி மாவட்டத்தில் பரவலாக பெய்த மழையால் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    தென்காசியில் உள்ள அணைகளில் நீர் இருப்பு வேகமாக குறைந்து வருகிறது. தற்போது பெய்த மழையால் பூமி குளிர்ச்சியடைந்தது. இதனால் அணைகளில் நீர்மட்டம் சற்று குறையாமல் இருக்கும் என்று விவசாயிகள் நம்பிக்கை அடைந்துள்ளனர்.

    அதிகபட்சமாக சங்கரன்கோவிலில் 6 மில்லி மீட்டர் மழை பெய்தது. தென்காசியில் 3.6 மில்லி மீட்டரும், செங்கோட்டையில் 1 மில்லிமீட்டரும் மழை பதிவாகியது. அணைகளை பொறுத்தவரை நெல்லை மாவட்டத்தின் பிரதான அணையான 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசத்தில் 104.20 அடி நீர் இருப்பு உள்ளது.

    சேர்வலாறில் 117.19 அடியும், 118 அடி கொள்ளளவு கொண்ட மணிமுத்தாறில் 90.60 அடியும் நீர் இருப்பு உள்ளது. தென்காசி மாவட்டத்தில் 85 அடி உச்சநீர்மட்டம் கொண்ட கடனா அணையில் 67.70 அடியும், ராமநதியில் 59.88 அடியும் நீர் இருப்பு உள்ளது. சிறிய அணையான குண்டாறு அணையில் 28.87 அடி நீர் இருக்கிறது.



    Next Story
    ×