search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருவாரூர் பவித்திரமாணிக்கம் பகுதியில் பதனீர் விற்பனை நடைபெற்றபோது எடுத்தபடம்.
    X
    திருவாரூர் பவித்திரமாணிக்கம் பகுதியில் பதனீர் விற்பனை நடைபெற்றபோது எடுத்தபடம்.

    திருவாரூரில் பதனீர் விற்பனை அதிகரிப்பு

    தமிழகத்தில் வெயில் வாட்டி வதைத்து வருவதால் திருவாரூர் பகுதியில் பதனீர் விற்பனை அதிகரித்துள்ளது.
    திருவாரூர்:

    கோடை காலத்தின் தொடக்கம் முதலே வெயில் வாட்டி வதைத்து வருகிறது. வெயிலினால் ஏற்படும் உடல் வெப்பத்தை தணித்து கொள்ள இளநீர், மோர், பழச்சாறுகள், குளிர்பானங்கள், ஆகியவற்றை பொதுமக்கள் நாடி செல்கின்றனர். இதில் உடல் நலத்தை காக்கும் சிறப்புமிக்க இயற்கை உணவாக பதனீர் விளங்குகிறது. உரங்களை பயன்படுத்தாமல் வளரக்கூடிய பனை மரங்கள் இயற்கை நமக்கு தந்த வரம். பனை மரத்தில் இருந்து இறக்கப்படும் பதனீர் இனிப்பு சுவையுடையது. பதனீரிலிருந்து கருப்பட்டி தயாரிக்கப்படுகிறது.

    பதனீர் உடலின் வெப்பத்தை தணித்து கண் பார்வை திறன் அதிகரிக்க செய்கிறது. வயிற்றுப்புண், வயிற்று வலியை போக்குவதுடன், ஜீரண சக்தியை பெருக்குகிறது. மலச்சிக்கலை போக்கும் தன்மையும் பதனீருக்கு உண்டு.

    ஒவ்வொரு ஆண்டும் கோடை காலத்தில் பதனீருக்கு மவுசு அதிகரிக்கும். அதன்படி இந்த ஆண்டு வெளி மாவட்டங்களை சேர்ந்த பனை தொழிலாளர்கள் பதனீரை மொத்தமாக கொள்முதல் செய்து திருவாரூர் பகுதியில் விற்பனை செய்து வருகின்றனர். இதனால் திருவாரூர் பகுதியில் பதனீர் விற்பனை அதிகரித்துள்ளது.

    திருவாரூரில் 1 லிட்டர் ரூ.50 முதல் ரூ.60 வரை பதனீர் விற்பனை செய்யப்படுகிறது. இயற்கை உணவுகள் மீது மக்கள் ஆர்வம் காட்டி வருகிற நிலையில் கோடை வெப்பத்தை தணித்து உடலுக்கு வலு சேர்க்கும் பதனீரையும் மக்கள் ஆர்வத்துடன் வாங்கி அருந்தி வருகின்றனர்.
    Next Story
    ×