search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    புல்லக்கடம்பன் ஊராட்சியில் குடிநீர் பிரச்சினையை தீர்க்கக்கோரி கிராம மக்கள் போராட்டம் நடத்த முடிவு

    புல்லக்கடம்பன் ஊராட்சியில் குடிநீர் பிரச்சினையை தீர்க்கக்கோரி கிராம மக்கள் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.
    தொண்டி:

    திருவாடானை யூனியன் புல்லக்கடம்பன் ஊராட்சியில் சோழகன் பேட்டை, எட்டிசேரி, புதுக்காடு பத்திரன் வயல், தீர்த்தாண்டதானம், மருங்கூர், ஏந்தவயல், பூந்தோட்டம், மாணவநகரி, ஆதிதிராவிடர் காலனி, அரசப்பன் குடியிருப்பு, ஸ்தானிகன்வயல் ஆகிய கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமங்களுக்கு மங்கலக்குடி கூட்டுக்குடிநீர் திட்டத்தின் மூலம் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது.

    அதன்பிறகு கடந்த 5 வருடங்களாக மங்கலக்குடி கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் புல்லக் கடம்பன் ஊராட்சி கிராமங்களுக்கு குடிநீர் வினியோகம் முற்றிலுமாக தடைபட்டு உள்ளது. இதனிடையே காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் அவ்வப்போது குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தாலும் ஊராட்சியில் உள்ள அனைத்து கிராமங் களுக்கும் காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் முறையான குடிநீர் வினியோகம் நடைபெறவில்லை.

    இதனால் குறிப்பிட்ட கிராமங்களுக்கு மட்டும் அவ்வப்போது கிடைத்து வந்த காவிரி கூட்டுக்குடிநீரும் கடந்த 2 ஆண்டுகளாக முழுமையாக தடைபட்டுள்ளது என்று இந்த பகுதி கிராம பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். மேலும் இதுதொடர்பாக ஊராட்சியை சேர்ந்த பொதுமக்கள் தொடர்ந்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கும் மாவட்ட நிர்வாகத்திற்கும் தமிழக அரசின் கவனத்திற்கும் கொண்டு சென்று இதுநாள் வரை சம்பந்தப்பட்ட குடிநீர் வாரிய அதிகாரிகள் ஊராட்சியில் ஏற்பட்டுள்ள குடிநீர் பிரச்சினையை கண்டுகொள்ள வில்லை என்று பொதுமக்கள் புகார் கூறுகின்றனர்.

    இதுகுறித்து புல்லக்கடம்பன் ஊராட்சி தலைவர் மாதவி கண்ணன், துணைத் தலைவர் மனோகரன் ஆகியோர் கூறியதாவது:- புல்லக் கடம்பன் ஊராட்சி கிராமங்களில் பல ஆண்டுகளாக கூட்டுக்குடிநீர் திட்ட குடிநீர் வினியோகம் தடை பட்டுள்ளதால் கடும் குடிநீர் பிரச்சினையை சந்தித்து வருகிறோம்.

    தற்போது இந்த ஊராட்சியை சேர்ந்த பொதுமக்கள் குடிநீரை விலைக்கு வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். இங்குள்ள குடிநீர் பிரச்சினையை தீர்க்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்தும் கண்டுகொள்ளவில்லை. இந்தநிலையால் வேறு வழியின்றி ஊராட்சி மக்களை திரட்டி கிழக்கு கடற்கரை சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளோம் என்றும் தெரிவித்தனர்.

    Next Story
    ×