search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்
    X
    சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்

    ரெம்டெசிவிர் மருந்தை தானாக எடுத்துக்கொள்ள கூடாது- ராதாகிருஷ்ணன்

    முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 2,400 கூடுதல் ஆக்சிஜன் படுக்கைகளை சென்னையில் உள்ள அனைத்து மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளிலும் போடச்சொல்லி இருப்பதாக தமிழக சுகாதாரத்துறை செயலாளர் கூறினார்.
    சென்னை:

    தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் சென்னையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    கொரோனா தொற்றின் 2-வது அலை இந்தியாவில் மட்டுமின்றி தமிழகத்திலும் மிக வேகமாக பரவி வருகிறது. நேற்றைய தினம் தேசிய அளவில் 2620 பேர், தமிழ்நாட்டில் 78 பேர் என 2.30 சதவீதம் இறப்பு ஏற்பட்டுள்ளது.

    பொதுமக்கள் முதலில் நடைமுறையை புரிந்து கொள்ள வேண்டும். இன்று மொத்தம் 95 ஆயிரத்து 48 பேர் நோய்தொற்றால் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    48ஆயிரத்து 289 பேர் அறிகுறி இல்லாமலும், சிறிய அறிகுறிகளுடனும் வீட்டில் தனிமையில் உள்ளனர். இது 50.8 சதவீதம் ஆகும். 8,413 பேர் கோவிட் முகாம்களில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இது 8.84 சதவீதம் ஆகும்.

    24ஆயிரத்து 569 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இவர்கள் அதிக பாதிப்பு கொண்டவர்கள். இது 25.8 சதவீதமாகும். 13ஆயிரத்து 707 பேர் இன்று மருத்துவமனைகளில் சேர இருக்கிறார்கள். 8 ஆயிரம் முதல் 9 ஆயிரம் பேர் இன்று டிஸ்சார்ஜ் ஆவார்கள்.

    கொரோனா பரிசோதனை

    பொதுமக்கள் மருத்துவமனைகளில் பரிசோதனை செய்கிறார்கள். அரசு சார்பில் நகரம், மாவட்டம் அளவில் காய்ச்சல் முகாம்கள் நடத்தி கொரோனா பரிசோதனை செய்கிறோம். பரிசோதனைக்கு பிறகு அதன் முடிவு வரும் வரை இரவில் பொதுமக்கள் பதட்டம் அடைய வேண்டாம்.

    சென்னையில் 12 ஸ்கிரீனிங் சென்டர்கள் உள்ளன. அங்கு நீங்கள் சென்றதும், எக்ஸ்ரே மற்றும் ரத்த பரிசோதனை செய்து கொரோனா சிகிச்சையை வீட்டிலேயே தொடங்கலாமா அல்லது கொரோனா சிகிச்சை முகாம்களுக்கு செல்லலாமா அல்லது கொரோனா மருத்துவமனைகளுக்கு செல்லலாமா என்பதை மருத்துவர்கள் நிர்ணயிப்பார்கள்.

    50 முதல் 100 பேர் வரை இரவில் பதட்டத்துடன் மருத்துவமனைகளுக்கு வரும்போது ஆஸ்பத்திரிகளில் படுக்கை வசதி இல்லை என்ற தோற்றத்தை உருவாக்கி விடும். மருத்துவமனைகளில் 40 சதவீத படுக்கைகள் காலியாக உள்ளன. அதே நேரத்தில் இந்த படுக்கைகள் ஆக்சிஜன் தேவை உள்ளவர்களுக்கு ஒதுக்கப்பட வேண்டும்.

    ஆக்சிஜன் தேவையில்லாத நோயாளிகள் கொரோனா சிகிச்சை முகாம்களிலோ அல்லது வீடுகளிலோ தனிமையில் இருக்கலாம். இது எய்ம்ஸ் போன்ற மருத்துவர்களின் கருத்து.

    சென்னை மாநகராட்சியில் 96 டெம்போ டிராவலர் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவை ஸ்கிரீனிங் சென்டர்களுக்கு கொண்டு செல்லப்படுகின்றன. பொதுமக்கள் முதலில் காய்ச்சல் கண்காணிப்பு மையங்களுக்கு செல்ல வேண்டும் என்பது எனது முதல் வேண்டுகோள்.

    அதிக அறிகுறி உள்ளவர்கள் தாங்கள் காத்திருக்க முடியாது என்றால் 108-க்கு போன் செய்ய வேண்டும். மேலும் மாநகராட்சியில் கட்டுபாட்டு அறையை திறந்து இருக்கிறோம். 044-46122300, 044-25384520 ஆகிய எண்களுக்கு போன் செய்தால் அந்த குழுவினர் உங்களை அணுகி மருத்துவ மனைக்கு அனுப்புவார்கள்.

    மேலும் 104-க்கும் போன் செய்யலாம். இப்படி செய்தால் மருத்துவமனையில் தேவையற்ற கூட்டம் வராது. கொரோனா பரிசோதனை முடிவு நோயாளிகளுக்கு வருவதைபோல் நகர, மாவட்ட நிர்வாகங்களுக்கும் வரும். பரிசோதனை முடிவு வந்து 24 மணி நேரத்துக்குள் உங்களை யாரும் அணுகாவிட்டால் இந்த நம்பர்களுக்கு போன் செய்யலாம்.

    தமிழகத்தில் தேவையான மருந்துகள் கையிருப்பில் உள்ளது. நேற்று முன்தினம் சிலர் ரெம்டெசிவிர் மருந்தை வாங்கி வீட்டிலேயே போட்டுக்கொண்டதை அறிந்தோம். இது தவறு. தனக்கு என்ன மருந்து வேண்டும் என்பதை மருத்துவரிடம் விட்டு விட வேண்டும். இந்த நேரத்தில் பதட்டத்தை தணிக்கும் பணியில் அனைவரும் ஈடுபட வேண்டும்.

    நோயை கட்டுப்படுத்துவதற்காக இரவு நேர ஊரடங்கு அமலில் உள்ளது. கொரோனா நோயை கட்டுப்படுத்த நமக்கு இன்னும் நல்ல வாய்ப்பு உள்ளது.

    சென்னையில் ஒரு லட்சத்து 20 ஆயிரம் தெருக்கள் உள்ளன. இதில் 4,256 தெருக்களில் தான் 3-க்கும் மேற்பட்ட கொரோனா பாதிப்பு உள்ளது. அதாவது 3,570 தெருக்களிலும், 686 குடியிருப்புகளிலும் 3-க்கும் அதிகமான பாதிப்பு உள்ளது.

    கிராமப்புறங்களில் 17 ஆயிரத்து 157 தெருக்களிலும், நகர்புறத்தில் 23 ஆயிரத்து 68 தெருக்களிலும் முழு கட்டுப்பாட்டுடன் செயல்பட்டால் கொரோனாவை கண்டிப்பாக கட்டுப்படுத்த முடியும்.

    தமிழக முதலமைச்சர் நேற்றும் ஆய்வு நடத்தினார். 363 மருத்துவர்கள் புதிதாக நியமனம் செய்யப்பட்டு உள்ளனர். 1,645 மருத்துவர்கள் மினி கிளினிக்கில் உள்ளனர். அவர்களை அந்தந்த மாவட்டத்தில் உள்ள கொரோனா மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளோம்.

    பெரிய மருத்துவ கல்லூரிகளில் இருக்கும் மருத்துவமனைகளில் தற்போது தாமதமாக செய்ய தகுந்த அறுவை சிகிச்சைகளை ஒத்தி வைக்குமாறு கூறி உள்ளோம்.

    தமிழகத்தில் நகரத்திலும், மாவட்டத்திலும் புறநோயாளிகள் வந்து செல்ல பல மருத்துவமனைகள் உள்ளன. ஆனால் 4 ஆயிரம் முதல் 5 ஆயிரம் பேர் வரை புற நோயாளிகளாக மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு வருகிறார்கள். இங்கு கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெறும் நிலையில் கூட்டம் சேர்வதால் அவர்களுக்கும் கொரோனா தொற்று பரவக்கூடிய வாய்ப்பு உள்ளது.

    எனவே மருத்துவகல்லூரி மருத்துவமனையில் புற நோயாளிகள் சிகிச்சைக்கு வருவதை ஒத்தி வைத்துள்ளோம். தமிழகத்தில் தேவையான ஆக்சிஜன் படுக்கைகள் இருந்தாலும் முதலமைச்சர், 2,400 கூடுதல் ஆக்சிஜன் படுக்கைகளை சென்னையில் உள்ள அனைத்து மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளிலும் போடச்சொல்லி இருக்கிறார்.

    சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் 1,618 படுக்கைகள் உள்ளன. இதில் 1,088 படுக்கைகளில் நோயாளிகள் இருக்கிறார்கள். ஸ்டான்லி மருத்துவமனையில் உள்ள 1100 படுக்கைகளில் 976 நோயாளிகள் உள்ளனர். கீழ்ப்பாக்கம் ஆஸ்பத்திரியில் உள்ள 480 படுக்கைகளில் 294 நோயாளிகள் உள்ளனர்.

    ஓமந்தூரார் ஆஸ்பத்திரியில் உள்ள 575 படுக்கைகளில் 501 நோயாளிகள் உள்ளனர். கிண்டியில் 525 படுக்கைகளில் 461 நோயாளிகள் உள்ளனர். மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளில் 4368 படுக்கைகளில் 3320 நோயாளிகள் உள்ளனர். 1048 படுக்கைகள் காலியாக உள்ளன.

    கே.கே.நகர், பெரியார் நகர், தண்டையார் பேட்டை உள்ளிட்ட 10 மருத்துவமனைகளில் 1750 படுக்கைகளில் 229 நோயாளிகள் உள்ளனர். 1521 படுக்கைகள் காலியாக உள்ளன. கொரோனா சிகிச்சை முகாம்களில் 11 ஆயிரத்து 645 படுக்கைகளில் 953 படுக்கைகள் காலியாக உள்ளன. எனவே பொதுமக்கள் ஆஸ்பத்திரிகளில் படுக்கை கிடைக்காது என்று பதட்டப்பட வேண்டாம்.

    தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளும் தங்களின் மருத்துவ வசதிகளை எங்களுக்கு கொடுக்கிறார்கள். அதையும் பயன்படுத்துமாறு கூறி இருக்கிறோம். அரசு எடுக்கும் அனைத்து முயற்சிகளையும் பொதுமக்கள் பதட்டத்துடன் பார்க்காமல் ஆக்கப்பூர்வமான ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.

    நாளை முழு ஊரடங்கை நாம் முழுமையாக பின்பற்ற வேண்டும். வரும் காலத்தில் நாம் கட்டுப்பாடுகளை ஒழுங்காக கடைப்பிடித்தால்தான் கொரோனா பரவல் சங்கிலியை உடைக்க முடியும். இந்த சங்கிலியை உடைத்தால் தான் மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளுக்கு வரக்கூடிய கூட்டங்கள் அதற்குரிய எண்ணிக்கையை தாண்டாமல் இருக்க முடியும்.

    மருத்துவர்கள், நர்சுகள், காவல்துறை மற்றும் முன்கள பணியாளர்கள் தங்களது உயிருக்கு ஆபத்தான நிலையில்தான் பணியாற்றி கொண்டிருக்கிறார்கள். பொதுமக்கள் இதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×