search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கலெக்டர் நேரில் ஆய்வு செய்த காட்சி
    X
    கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கலெக்டர் நேரில் ஆய்வு செய்த காட்சி

    கொரோனா சிகிச்சைக்கான ஆக்சிஜன், வெண்டிலேட்டர் கருவிகள் போதிய அளவு இருப்பில் உள்ளன - கலெக்டர் தகவல்

    கொரோனா சிகிச்சைக்கான ஆக்சிஜன் சிலிண்டர், வெண்டிலேட்டர் கருவிகள் போதிய அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்தார்.
    ராமநாதபுரம்:

    ராமநாதபுரம் நகராட்சி பகுதிகளில் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்கான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இம்மாவட்டத்தில் தற்போது 377 நபர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 114 நபர்கள் மருத்துவமனையில் உள்ள நிலையில், மீதமுள்ள நபர்கள் அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு உரிய மருத்துவ சிகிச்சை மற்றும் மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகிறது.

    மேலும் இம்மாவட்டத்தில் நோய்த்தொற்றால் பாதிக்கப்படுபவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் 4 கல்லூரிகள், தனியார் ஆஸ்பத்திரிகள், அரசு ஆஸ்பத்திரிகள் என 21 மையங்களில் 1,369 படுக்கை வசதிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. சூழ்நிலைக்கு ஏற்ப இதனை அதிகரித்திடவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கொரோனா சிகிச்சைக்காக போதிய ஆக்சிஜன் சிலிண்டர் மற்றும் வெண்டிலேட்டர் கருவிகளும் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.

    கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் பிறப்பிக்கப்பட்டுள்ள ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு மற்றும் இரவு ஊரடங்கு விதிமுறைகளை நடைமுறைப்படுத்திடவும், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கண்காணித்திடவும் மொத்தம் 27 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    முக கவசம் அணியாமல் இருத்தல், சமூக இடைவெளி கடைபிடிக்காமல் இருத்தல் போன்ற காரணங்களுக்காக மார்ச் 1-ந்தேதி முதல் இதுவரை ரூ.33 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு கலெக்டர் தெரிவித்தார்.

    இந்த ஆய்வின் போது, நகராட்சி என்ஜினீயர் நிலேஷ்வர், தாசில்தார் ரவிச்சந்திரன், பொது சுகாதாரத்துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

    Next Story
    ×