search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழக அரசு
    X
    தமிழக அரசு

    ஆக்சிஜன் குழாய்கள், சிலிண்டர் அறைகள் அமைக்க ரூ.135 கோடி ஒதுக்கீடு- தமிழக அரசு உத்தரவு

    கொரோனா தொற்று தடுப்பு பணிகள் தொடர்பாக ஆக்சிஜன் குழாய்கள், சிலிண்டர் அறைகளை ஏற்படுத்த ரூ.135 கோடி ஒதுக்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
    சென்னை:

    சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    எம்.எல்.ஏ.க்கள் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.235 கோடி தொகையை சுகாதாரத்துறைக்கு வழங்கி தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. 2020-21-ம் ஆண்டில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்கான மருந்துகள், உபகரணங்களை இதன் மூலம் வாங்கிக்கொள்ள முடியும்.

    இந்த நிலையில் மருத்துவ கல்வி இயக்குனர், மருந்துகள் மற்றும் ஊரக சுகாதார சேவைகள் இயக்குனர், பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் (கட்டிடம்) ஆகியோர் அரசுக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

    அதில், ஆக்சிஜன் குழாய்கள் பொருத்துவது, ஆக்சிஜன் சிலிண்டர்களை வைப்பதற்கான அறைகளை உருவாக்குவது, திரவ ஆக்சிஜன் தயாரிப்பு நிலையங்களில் தளங்களை ஏற்படுத்துவது, கொரோனா தொடர்பான கட்டிட மற்றும் எலக்ட்ரிக்கல் பழுது பார்க்கும் பணிகள் உள்ளிட்ட சில பணிகளுக்கு நிர்வாக மற்றும் நிதி தொடர்பான அனுமதிகளை அளிக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.

    ஆக்சிஜன் சிலிண்டர்கள்

    மேலும், ஆக்சிஜன் குழாய்கள் பொருத்துவது, கட்டிட மற்றும் எலக்ட்ரிக்கல் பழுது பார்க்கும் பணிகள் ஆகியவற்றிற்கு மட்டும் ரூ.135.41 கோடி செலவாகும். இதில் குறிப்பிட்ட அளவு பணிகள் முடிந்திருப்பதால், அந்தப் பணிகளை மேற்கொள்ளும் ஒப்பந்ததாரர்களுக்கான தொகையை வழங்க வேண்டி உள்ளது என்று தெரிவித்துள்ளனர்.

    எனவே இந்த தொகைக்கான ஒப்புதலை அரசு வழங்குகிறது. அதில், ரூ.65.33 கோடியை எம்.எல்.ஏ.க்கள் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்தும், ரூ.70.08 கோடியை மாநில பேரிடர் மேலாண்மை நிதியில் இருந்தும் ஒதுக்க உத்தரவிடப்படுகிறது.

    இந்த நிதி மூலம் ஆக்சிஜன் குழாய் பொருத்துதல், சிலிண்டர் அறைகள் ஏற்படுத்துதல் உள்ளிட்ட பணிகளுக்கு பயன்படுத்தப்பட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×