search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    சென்னையில் இருந்து விழுப்புரம் மாவட்டத்திற்கு 6,600 கொரோனாதடுப்பூசி மருந்து வந்தது

    விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் சூழலில் பொதுமக்களை அந்நோயில் இருந்து காக்க அவர்களுக்கு கோவிஷீல்டு, கோவாக்சின் என்ற 2 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது.
    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் சூழலில் பொதுமக்களை அந்நோயில் இருந்து காக்க அவர்களுக்கு கோவிஷீல்டு, கோவாக்சின் என்ற 2 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது. இந்த தடுப்பூசி செலுத்தும் பணி கடந்த ஜனவரி மாதம் 16-ந் தேதி தொடங்கப்பட்டது.

    விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த 19-ந் தேதி வரை கோவிஷீல்டு (முதல் டோஸ்) 77,369 பேருக்கும், கோவாக்சின் (முதல் டோஸ்) 5,608 பேருக்கும் என மொத்தம் 82,977 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டிருந்தது. இவர்களில் கோவிஷீல்டு (2-வது டோஸ்) 7,797 பேருக்கும், கோவாக்சின் (2-வது டோஸ்) 777 பேருக்கும் போடப்பட்டது. மாவட்டத்தில் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் வகையில் கணக்கெடுக்கப்பட்டு 5,38,357 பேருக்கு தடுப்பூசி செலுத்த திட்டமிட்டிருந்த நிலையில் வெறும் 82,977 பேருக்கு தடுப்பூசி போடப்பட்ட சூழலில் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. ஏற்கனவே இருப்பு வைத்து செலுத்தப்பட்டு வந்த தடுப்பூசி மருந்தும் தீர்ந்து விட்டது. இதன் காரணமாக மாவட்டத்தில் தடுப்பூசி செலுத்தப்பட்டு வந்த 75 இடங்களில் எங்கும் தடுப்பூசி மருந்து இருப்பு இல்லாத நிலை ஏற்பட்டதால் பொதுமக்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள முடியாமல் ஏமாற்றமடைந்தனர்.

    இதுகுறித்து சென்னையில் உள்ள தமிழ்நாடு சுகாதாரத்துறை அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. புனேயில் இருந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு 6 லட்சம் தடுப்பூசி மருந்துகள் சென்னைக்கு வரவழைக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் தமிழகத்தில் தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்ட மாவட்டங்களுக்கு தடுப்பூசி மருந்துகள் அனுப்பி வைக்கப்பட்டன.

    அந்த வகையில் விழுப்புரம் மாவட்டத்திற்கு நேற்று 6,600 கோவிஷீல்டு மருந்துகள் வந்துள்ளன. இந்த மருந்துகள் மாவட்டத்தில் உள்ள தடுப்பூசி மையங்களுக்கு பிரித்து அனுப்பப்பட்டு அந்தந்த மையங்களுக்கு வந்த பொதுமக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. நேற்று 2,200 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்ட நிலையில் கையிருப்பாக 4,400 தடுப்பூசி மருந்துகள் உள்ளன.

    இந்த மருந்துகள் அடுத்த 2 நாட்களுக்குள் தீர்ந்து விடும் என்பதால் அதற்குள்ளாகவே கூடுதலாக தடுப்பூசி மருந்துகளை அனுப்பி வைக்கும்படி சென்னையில் உள்ள மாநில சுகாதாரத்துறை அலுவலகத்திற்கு தகவல் அனுப்பியுள்ளதாகவும், அவர்களும் தடுப்பூசி மருந்துகளை உடனடியாக அனுப்பி வைப்பதாக கூறியதாகவும் விழுப்புரம் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
    Next Story
    ×