search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ் பரிசோதனை
    X
    கொரோனா வைரஸ் பரிசோதனை

    கொரோனா சமூக பரவலை கண்டறிய 3,690 பேரிடம் ரத்த மாதிரி சேகரிப்பு

    கொரோனா தொற்று சமூக பரவலாக மாறியுள்ளதா என கண்டறிய சிறப்பு குழுவின் மூலம் அனைத்து மாவட்டங்களிலும் பாதிப்பு அதிகம் உள்ள இடங்களில் மாநில சுகாதாரத்துறையின் மூலம் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு வருகிறது.
    கோவை:

    தமிழகம் முழுவதும் கொரோனா 2-வது அலையின் காரணமாக தொற்று பாதிப்பு அதிகரித்துள்ளது. குறிப்பாக ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள், ஒரே இடத்தில் பணியாற்றும் நபர்களுக்கு தொற்று ஏற்பட்டு வருகிறது. பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை பாதிப்பு ஏற்பட்டு வருவதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    பாதிப்பை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கையை மாநில அரசு எடுத்து வருகிறது. கொரோனா தொற்று சமூக பரவலாக மாறியுள்ளதா? என கண்டறிய சிறப்பு குழுவின் மூலம் அனைத்து மாவட்டங்களிலும் பாதிப்பு அதிகம் உள்ள இடங்களில் மாநில சுகாதாரத்துறையின் மூலம் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு வருகிறது. அதன்படி கோவை, ஈரோடு, நீலகிரி, நாமக்கல் மாவட்டங்களில் சிறப்பு குழுவினர் கொரோனா பரவல் குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.

    கோவை மாநகராட்சி பகுதியை சேர்ந்த கே.கே. புதூர், பீளமேடு, காந்திபுரம், ராமநாதபுரம், சிங்காநல்லூர் ஆகிய 5 இடங்களிலும், ஆனைமலை, அன்னூர், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, சூலூர், தொண்டாமுத்தூர், மதுக்கரை, மேட்டுப்பாளையம், வால்பாறை ஆகிய வட்டாரங்களில் 37 இடங்களிலும் என மொத்தம் 42 இடங்களில் 30 பேர் வீதம் மொத்தம் 1,260 பேரிடம் இருந்து ரத்த மாதிரிகனை சேகரித்தனர்.

    திருப்பூரில் 27 இடங்களில் 810 பேரிடமும், நீலகிரியில் 8 இடங்களில் 240 பேரிடமும், நாமக்கல் மாவட்டத்தில் 20 இடங்களில் 600 பேரிடமும், ஈரோட்டில் 26 இடங்களில் 780 பேரிடம் என 5 மாவட்டங்களில் மொத்தம் 3 ஆயிரத்து 690 பேரிடம் இருந்து மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளது. இவை ஆய்வுக்காக கோவை சுகாதாரத்துறை துணை இயக்குனர் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளன.

    கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி, நாமக்கல் மாவட்டங்களில் கொரோனா சமூக பரவல் குறித்து கண்டறிய மொத்தம் 3,690 பேரிடம் மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளது. இவை தற்போது கோவை சுகாதாரத்துறை துணை இயக்குனர் அலுவலகத்தில் உள்ள நவீன கருவியின் மூலம் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

    இதன் முடிவுகள் அரசிற்கு தெரிவிக்கப்படும். பின்னர் அவர்கள் சமூக பரவல் ஏற்பட்டுள்ளதா? என்பதை குறித்து அறிவிப்பார்கள். ஏற்கனவே கடந்த அக்டோபர், நவம்பர் மாதங்களில் மாதிரிகள் சேகரிக்கப்பட்ட நிலையில் தற்போது 2-வது முறையாக மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.
    Next Story
    ×