search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எடப்பாடி பழனிசாமி
    X
    எடப்பாடி பழனிசாமி

    ரூ.1 கோடி கேட்டு திமுக நிர்வாகி வழக்கு- எடப்பாடி பழனிசாமிக்கு ஐகோர்ட்டு நோட்டீசு

    கோவை திமுக நிர்வாகி மீது அவதூறு பரப்புவதாக தொடரப்பட்ட வழக்கில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு நோட்டீஸ் அனுப்ப சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
    சென்னை:

    கோவை தி.மு.க. நிர்வாகியான சூலூர் ஏ. ராஜேந்திரன் கடந்த ஆண்டு மார்ச் 19-ந்தேதி சென்னையிலிருந்து கோவைக்கு ரெயிலில் சென்றுள்ளார். அவருக்கு நீரழிவு பிரச்சினை இருப்பதால் மேல்படுக்கையிலிருந்து கீழே இறங்கும்போது, நிலை தடுமாறி கீழ் படுக்கையில் இருந்த பெண் மீது விழுந்ததாக கூறப்படுகிறது.

    இதுதொடர்பாக ரெயில்வே நிர்வாகம் மற்றும் காவல்துறையில் அந்த பெண் வாய்மொழி புகார் அளித்த நிலையில், தனது செயல்பாடு உள்நோக்குடன் நடந்தது இல்லை என்றும், நீரழிவு பிரச்சினை இருப்பதால் அவசரமாக இறங்கியதாகவும் சூலூர் ராஜேந்திரன் அந்த பெண்ணிடம் விளக்கம் அளித்துள்ளார்.

    இதன்பின்னர் தன் புகாரில் நடவடிக்கை எடுக்க வேண்டாம் என பெண் தெரிவித்துள்ளார். ஆனால் 15 நாட்களுக்கு பிறகு சூலூர் ராஜேந்திரன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    ரெயில் பயணத்தின்போது பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சட்டமன்ற தேர்தல் பிரசாரங்களில் தன்னைப்பற்றி அவதூறாக பேசுவதாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆகியோருக்கு எதிராக சூலூர் ராஜேந்திரன் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

    சம்பந்தப்பட்ட பெண் அளித்த புகாரில் பதிவான வழக்கை ஐகோர்ட்டு ரத்து செய்துவிட்ட நிலையில், அவதூறாக சட்டமன்ற தேர்தல் பிரசார கூட்டங்களில் பேசுவதற்கு தடை விதிக்க வேண்டும். ஒரு கோடி ரூபாய் நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

    சென்னை ஐகோர்ட்

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக தொடர்ந்த வழக்கு மட்டும் நீதிபதி வி.பார்த்திபன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ராஜேந்திரன் வழக்கு குறித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டார். இந்த வழக்கை ஜூன் 10-ந் தேதிக்கு ஒத்திவைத்தார்.

    Next Story
    ×