search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    குமரியில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு நீடிக்கிறது - பொதுமக்கள் போராட்டம்

    குமரியில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு நீடிக்கிறது. தோவாளை அரசு ஆஸ்பத்திரியில் தட்டுப்பாட்டை கண்டித்து பொது மக்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
    ஆரல்வாய்மொழி:

    இந்தியாவில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக தடுப்பூசி போடப்படுகிறது. அதன்படி, குமரி மாவட்டத்தில் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. ஏராளமானவர்கள் ஆர்வமுடன் அரசு ஆஸ்பத்திரி மற்றும் கொரோனா தடுப்பூசி மையங்களில் கொரோனா தடுப்பு ஊசியை போட்டுக் கொண்டனர்.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களாக அரசு ஆஸ்பத்திரிகளில் கொரோனா தடுப்பூசி மருந்து தட்டுப்பாடாக உள்ளது. இதனால் தடுப்பூசி போட வரும் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.

    அதே போல் தோவாளை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கடந்த 5 நாட்களாக தடுப்பூசி போட வருபவர்களிடம், மருந்து இல்லை என்று டாக்டர்கள் திருப்பி அனுப்பி வந்ததாக தெரிகிறது.

    இந்த நிலையில் கொரோனா தடுப்பூசி மருந்து தட்டுப்பாட்டை கண்டித்து நேற்று ஆஸ்பத்திரி முன்பு தடுப்பூசி போட வந்த பொதுமக்கள், திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    மேலும் இது தொடர்பாக ஆஸ்பத்திரியில் உள்ள டாக்டரிடம் மனு ஒன்றையும் அவர்கள் கொடுத்து சென்றனர். அதில் ‘கொரோனா தடுப்பூசியை தட்டுப்பாடு இன்றி இருப்பு வைத்து, வரும் அனைவருக்கும் தடுப்பூசி போட வேண்டும்’ என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

    குமரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் நிலவரப்படி கொரோனா தடுப்பூசி முதல் டோஸ் 79 ஆயிரத்து 762 பேருக்கு போடப்பட்டு உள்ளது. 2-வது டோஸ் 12 ஆயிரத்து 297 பேருக்கு போடப்பட்டு இருக்கிறது.

    மொத்தம் 92 ஆயிரத்து 59 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு உள்ளது. இதுபோக நேற்று 445 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
    Next Story
    ×