search icon
என் மலர்tooltip icon

    செய்திகள் (Tamil News)

    காந்திபுரம் பஸ்நிலையத்தில் இரவில் தவித்த பயணிகள்
    X
    காந்திபுரம் பஸ்நிலையத்தில் இரவில் தவித்த பயணிகள்

    இரவு ஊரடங்கால் பஸ் நிறுத்தம்- கோவையில் பஸ் நிலையத்தில் தங்கிய பயணிகள்

    கோவை பஸ் நிலையத்திற்கு இரவு 11 மணிக்கு வந்த பயணிகள் பஸ் நிலையத்திலேயே படுத்து தூங்கினர்.
    கோவை:

    தமிழகத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் நோக்கில் நேற்று இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் இரவு நேரங்களில் நீண்ட தூரம் செல்லும் பஸ்கள் அனைத்தும் பகல் நேரங்களிலேயே இயக்கப்பட்டது.

    கோவை மாநகரில் சிங்காநல்லூர், காந்திபுரம், திருவள்ளுவர் பஸ் நிலையங்கள் உள்ளன. இந்த பஸ் நிலையத்தில் இருந்து வெளி மாவட்டங்களான சென்னை, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி போன்ற பகுதிகளுக்கு இரவு நேரங்களில் பஸ்கள் இயக்கப்படும்.

    நேற்று முதல் இரவு நேர முழு ஊரடங்கு அமலுக்கு வந்ததால் இந்த பஸ்கள் அனைத்தும் பகலிலேயே இயக்கப்பட்டன. அப்படி இயக்கப்பட்ட பஸ்களிலும் பயணிகள் கூட்டம் குறைந்தே காணப்பட்டது.

    இரவு 8 மணியோடு வெளியூர்களுக்கு செல்லக்கூடிய அனைத்து பஸ்களும் நிறுத்தப்பட்டன. இதனால் பஸ் நிலையங்கள் வெறிச்சோடியது. இந்த நிலையில் இரவு 11 மணியளவில் வெளியூருக்கு செல்வதற்காக 15-க்கும் மேற்பட்டோர் காந்திபுரம் மத்திய பஸ் நிலையத்திற்கு வந்தனர்.

    அவர்களுக்கு பஸ்கள் நிறுத்தப்பட்டது தெரியவில்லை. இதனால் எப்படியும் பஸ் வரும் என நீண்ட நேரமாக அங்கேயே காத்திருந்தனர். ஆனால் வெகுநேரமாக பஸ்கள் வராததால் அவர்கள் அங்கும் இங்கும் சுற்றி திரிந்தனர்.

    இரவு நேர ஊரடங்கின்போது பஸ் நிலையத்தில் சிலர் சுற்றி திரிவதை அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த மாநகர சட்டம் ஒழுங்கு துணை கமி‌ஷனர் ஸ்டாலின் பார்த்தார். உடனடியாக அவர் பஸ் நிலையத்திற்கு சென்று அங்கிருந்த பயணிகளிடம் விசாரித்தார். அவர்கள் தாங்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்ல வந்ததாகவும், ஆனால் இதுவரை பஸ்கள் வரவில்லை எனவும் தெரிவித்தனர்.

    அதற்கு அவர், இரவு நேர ஊரடங்கால் பஸ்கள் நிறுத்தப்பட்டுள்ளன. எனவே நீங்கள் வெளியில் சுற்றி திரியாமல் பஸ் நிலையத்திலேயே தங்கி கொள்ளுங்கள். காலையில் பஸ் இயக்கப்படும்போது ஊருக்கு செல்லுங்கள் என அறிவுரை கூறினார். இதையடுத்து பயணிகள் பஸ் நிலையத்திலேயே படுத்து தூங்கினர். பின்னர் காலையில் பஸ் இயக்கப்பட்டதும் அதில் ஏறி தங்கள் ஊருக்கு சென்றனர்.

    இதேபோல் நேற்று இரவு முதல் இன்று அதிகாலை 3 மணி வரை சென்னை-மங்களூர் ரெயில் உள்பட 5 ரெயில்கள் கோவை ரெயில்நிலையத்திற்கு வந்தன. இதில் ஏராளமான பயணிகள் வந்திறங்கினர். அவர்கள் தங்கள் வீடுகளுக்கு செல்வதற்கு வெளியில் பாதுகாப்பு பணியில் இருந்த மாநகர போலீசார் ஆட்டோக்கள் ஏற்பாடு செய்து கொடுத்தனர். அதில் பயணித்து ரெயில் பயணிகள் வீடுகளுக்கு சென்றனர்.


    Next Story
    ×