search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    கரூர் மாவட்டத்தில் 2020-ம் ஆண்டில் 12.35 லட்சம் பேருக்கு பரிசோதனை

    கரூர் தான்தோன்றிமலையில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி, புலியூரில் உள்ள செட்டிநாடு பொறியியல் கல்லூரிகளில் 1,000 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன.

    திருச்சி:

    தொழில் நகராமான கரூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டு கொரோனாவில் முதல் அலை பரவத்தொடங்கியபோது பல நாட்கள் உச்சம் தொட்டது. இருந்தபோதிலும் சுகாதாரத்துறையினர் மேற்கொண்ட தீவிர தடுப்பு நடவடிக்கையால் நோய் தொற்று பெரிதும் கட்டுப்படுத்தப்பட்டது. தொடர் பரிசோதனைகள், காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டதன் மூலம் கொரோனா கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

    கடந்த 2020-ம் ஆண்டில் 12 லட்சத்து 35 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கிடையே கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனை தடுக்கும் விதமாக கரூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

    குறிப்பாக தீவிர காய்ச்சல் முகாம்கள், உடல் பரிசோதனை முகாம்கள், சளி, ரத்த மாதிரி சேகரிப்பு, மாவட்டம் முழுவதும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கவும், தனிமைப்படுத்திக்கொள்ளவும் படுக்கை வசதிகள் தயார் நிலையில் உள்ளன.

    இந்தநிலையில் கடந்த மார்ச் மாதம் வரை கரூர் மாவட்டத்தில் 14,445 சிறப்பு உடல் பரிசோதனை முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. இதில் 12,35,455 பேருக்கு தனித்தனியாக பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. அவர்களிடம் இருந்து 2,39,502 சளி மாதிரி எடுக்கப்பட்டுள்ளது. அதில் 4 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

    கடந்த மாதம் மட்டும் 1,411 சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு அதன் மூலம் 1,38,673 பேருக்கு பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது. 48 ஆயிரம் பேருக்கு ரத்தம், சளி மாதிரி பரிசோதனைக்கு எடுக்கப்பட்டு, அதில் 463 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது.

    அவர்களில் 196 பேர் கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும், 211 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டும் உள்ளனர். 28 பேர் கோவையிலும், 5 பேர் சேலத்திலும், 21 பேர் திருச்சியிலும் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெறுவதற்காக பொது சுகாதாரத்துறை பல்வேறு ஏற்பாடுகளை செய்து கொடுத்துள்ளது. அதில் கரூர் தான்தோன்றிமலையில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி, புலியூரில் உள்ள செட்டிநாடு பொறியியல் கல்லூரிகளில் 1,000 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன.

    கரூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 66 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் 40 ஆண்களும், 26 பேர் பெண்களும் ஆவர்.

    Next Story
    ×