search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரெம்டெசிவிர் மருந்து
    X
    ரெம்டெசிவிர் மருந்து

    கொரோனாவை விரைந்து குணப்படுத்தும் ரெம்டெசிவிர் மருந்து தட்டுப்பாடு?

    தமிழகம், புதுச்சேரி, மகாராஷ்டிரா மாநிலங்கள் தங்களுக்கு ரெம்டெசிவிர் ஊசி மருந்தை அனுப்பி வைக்குமாறு மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளன.

    சென்னை:

    கொரோனா தொற்றின் 2-வது அலை தீவிரம் அடைந்துள்ள நிலையில் ஆஸ்பத்திரிகளுக்கு வரும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 79 ஆயிரத்து 804 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    இவர்களுக்கு பல்வேறு நோய் எதிர்ப்பு சக்தி மருந்துகள் வழங்கப்பட்டாலும் ஆபத்தான நிலையில் உள்ள கொரோனா நோயாளிகளை காப்பாற்றுவதற்கு ‘ரெம்டெசிவிர்’ ஊசி மருந்து செலுத்தப்படுகிறது.

    இந்தியாவில் கொரோனா தொற்று அதிகம் உள்ள மாநிலங்களில் தற்போது ஆக்சிஜன், ரெம்டெசிவிர் ஊசி மருந்து, மருத்துவ மனைகளில் படுக்கைகள், வெண்டிலேட்டர்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

    கொரோனா வைரஸ்

    சென்னையை பொருத்தவரை கொரோனா நோயாளியை ஆஸ்பத்திரியில் சேர்ப்பதற்கு படாதபாடுபட்டுதான் சேர்க்க வேண்டி உள்ளது.

    எந்த ஆஸ்பத்திரிக்கு சென்றாலும் இடம் இல்லை. வேறு ஆஸ்பத்திரியை பாருங்கள் என்று அலைக் கழிக்கிறார்கள். இதனால் நோயாளிகளும், உறவினர்களும் படாதபாடு படுகிறார்கள்.

    சிபாரிசு உள்ளவர்கள் மட்டுமே விரைவாக ஆஸ்பத்திரிகளில் சேர முடிகிறது. மற்றவர்கள் நிலை திண்டாட்டமாக உள்ளது.

    ஆஸ்பத்திரியில் இடம் கிடைத்தாலும் நோயாளிகளின் உயிரை காப்பாற்றுவதற்காக போடப்படும் ‘ரெம்டெசிவிர்’ ஊசி மருந்து தற்போது கிடைப்பதில்லை.

    தனியார் ஆஸ்பத்திரிகளிலும் ரெம்டெசிவிர் மருந்துகளை வெளியில் மருந்து கடைக்கு சென்று வாங்கி வரச் சொல்கிறார்கள்.

    மருந்து கடைகளில் இந்த ‘ரெம்டெசிவிர்’ மருந்து கிடைப்பதில்லை. சில கடைகளில் இந்த மருந்தை ரூ.6 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை விலை சொல்கிறார்கள்.

    தமிழ்நாடு-புதுச்சேரியில் இந்த மருந்து கிடைக்காமல் மக்கள் அல்லல்படுகிறார்கள்.

    ரெம்டெசிவிர் மருந்துகளின் உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசர கால நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அப்படி இருந்தும் இந்த மருந்துக்கு கடும் கட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

    தமிழகம், புதுச்சேரி, மகாராஷ்டிரா மாநிலங்கள் தங்களுக்கு ரெம்டெசிவிர் ஊசி மருந்தை அனுப்பி வைக்குமாறு மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளன.

    தற்போது மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் உறவினர்களை காக்க மக்கள் ரெம்டெசிவிர் ஊசி மருந்தை வாங்க பல இடங்களில் அலைந்து திரியும் சம்பவங்கள் தொடர்கிறது.

    Next Story
    ×