search icon
என் மலர்tooltip icon

    செய்திகள் (Tamil News)

    குவித்து வைக்கப்பட்டுள்ள குண்டு மிளகாய் வத்தல்.
    X
    குவித்து வைக்கப்பட்டுள்ள குண்டு மிளகாய் வத்தல்.

    குண்டு மிளகாய் விளைச்சல் இல்லாததால் விவசாயிகள் கவலை

    கடந்த ஜனவரி வரை தொடர்ந்து பெய்த அடைமழையால் 5 குவிண்டால் கிடைக்க வேண்டிய இடத்தில், ஒரு ஏக்கருக்கு ஒரு குவிண்டால் மிளகாய் தான் கிடைத்துள்ளதாக விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
    விளாத்திகுளம்:

    தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம், புதூர் பகுதியில் ஒருபுறம் வைப்பாற்று பாசனம் என்றால், மறுபுறம் பெரும்பாலும் மானாவாரி நிலங்களாகவே உள்ளன.

    மானாவாரி நிலங்களில் உளுந்து, பாசி, கம்பு, மக்காச்சோளம், மல்லி, சூரியகாந்தி, பருத்தி, வெங்காயம் உள்ளிட்ட பயிர்கள் பயிரிட்டு வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளாக பருவநிலை மாற்றம் காரணமாக தொடர்ந்து நஷ்டத்தை விவசாயிகள் சந்தித்து வருகின்றனர்.

    கடந்த ஆண்டு புரட்டாசி மாதம் பெய்த மழையை தொடர்ந்து விவசாயிகள், வெங்காயத்துக்கு ஊடு பயிராகவும், தனியாகவும் என சுமார் 20 ஆயிரம் ஏக்கரில் குண்டு மிளகாய் பயிரிட்டனர். 120 நாட்கள் பயிரான மிளகாய் செடிகளில் இருந்து வழக்கமாக தை மாத கடைசியில் முதல் பறிப்பும், மாசி மாத 2-வது வாரத்தில் இரண்டாம் பறிப்பும், பங்குனி தொடக்கத்தில் 3-ம் பறிப்பும் என 3 கட்டங்களாக மிளகாய்கள் பறிக்கப்படுகின்றன.

    தற்போது குண்டு மிளகாய் பழங்கள் பறித்து, காய வைக்கும் பணி நடந்து தீவிரமாக நடந்து வருகிறது. ஆனால், கடந்த ஜனவரி வரை தொடர்ந்து பெய்த அடை மழையால் 5 குவிண்டால் கிடைக்க வேண்டிய இடத்தில், ஒரு ஏக்கருக்கு ஒரு குவிண்டால் மிளகாய் தான் கிடைத்துள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    இதுகுறித்து புதூரைச் சேர்ந்த விவசாயி எழிரசன் கூறுகையில்:

    “கடந்த ஆண்டு நல்ல விளைச்சல் இருந்தது. ஆனால், கொரோனா ஊரடங்கு காரணமாக அதனை விற்பனை செய்யாமல், நல்ல விலைக்காக காத்திருந்தோம். இதில், எங்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. வெளியே சில்லரை விலைக்கு அதிகளவு விற்பனை நடந்த நிலையில், எங்களிடம் முதலில் ஒரு குவிண்டால் குண்டு வத்தல் ரூ.10 ஆயிரத்துக்கும், அதன் பின்னர் ரூ.8 ஆயிரத்துக்குமே கொள்முதல் செய்தனர்.

    இந்தாண்டு, ஏக்கருக்கு 7 முறை உழவு, அடியூரம், களை பறித்தல், விதை மற்றும் மிளகாய் பறிப்பு என ரூ.15 ஆயிரம் வரை செலவு செய்தோம். புரட்டாசி மாதம் போக்கு காட்டிய மழை, அதன் பின்னர் அடைமழையாக மாறி பெய்து கெடுத்தது. இதனால் ஒரு ஏக்கருக்கு 5 குவிண்டால் கிடைக்க வேண்டிய இடத்தில் ஒரு குவிண்டால் தான் கிடைக்கிறது. ஆனால், ஒரு குவிண்டால் குண்டு வத்தல் ரூ.25 ஆயிரம் வரை கொள்முதல் செய்கின்றனர். விலை இருந்தும் விளைச்சல் இல்லை, என்றார் அவர்.

    அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் கூறும்போது, பயிர் காப்பீடு இழப்பீட்டு பணம், அந்தந்த ஆண்டே விடுவித்தால், எங்களுக்கு பயனாக இருக்கும். ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் பாசி, உளுந்து ஆகியவற்றை கொள்முதல் செய்கின்றனர். அதே போல் மானாவாரி நிலங்களில் விளையும் அனைத்து பொருட்களையும் அரசு கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், எங்களின் நீண்ட நாள் கோரிக்கையான ஊராட்சிகள் தோறும் தானிய கிடங்கு அமைக்க வேண்டும் என்பதை நிறைவேற்ற வேண்டும், என்றனர்.



    Next Story
    ×