search icon
என் மலர்tooltip icon

    செய்திகள் (Tamil News)

    கொரோனா பரிசோதனை (கோப்புப்படம்)
    X
    கொரோனா பரிசோதனை (கோப்புப்படம்)

    சென்னை நகரில் கொரோனா பரவல் 18 சதவீதம் அதிகரிப்பு

    சென்னை நகரில் தற்போது 1,500 பேர் கோவிட் கேர் மையங்களில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 80 சதவிகிதம் பேர் வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொண்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    சென்னை:

    தமிழ்நாட்டில் மற்ற இடங்களை ஒப்பிடும் போது சென்னை நகரில் நோய் பரவல் விகிதம் மிக அதிகமாக உள்ளது.

    தமிழ்நாட்டில் நோய் தொற்று அதிகரிப்பு விகிதம் 9.7 சதவிகிதமாக உள்ளது. ஆனால் சென்னை நகரில் அதிகரிப்பு விகிதம் 18 சதவிகிதமாக இருக்கிறது. அதாவது தமிழ்நாட்டின் மொத்த பரவல் விகிதத்தை விட சென்னை நகரில் 2 மடங்கு அதிகமாக பரவுகிறது.

    சென்னையில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 5-ந் தேதி பாதிப்பு எண்ணிக்கை 24 ஆயிரமாக இருந்தது. ஆனால் இப்போது இதன் எண்ணிக்கை 25 ஆயிரத்தை தாண்டி இருக்கிறது.

    சென்னை நகரில் தற்போது 1,500 பேர் கோவிட் கேர் மையங்களில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 80 சதவிகிதம் பேர் வீட்டிலேயே தனிமைபடுத்திக்கொண்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    தற்போது சென்னை நகரில் நோய் பரவலின் வேகத்தை பார்க்கும் போது ஒருவாரத்திலேயே இன்னும் 2 மடங்காக உயர்ந்துவிடும் என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகிறார்கள். அதன்படி பார்த்தால் அடுத்தவாரமே இதன் எண்ணிக்கை 50 ஆயிரமாக உயர்ந்துவிடும்.

    இதுசம்மந்தமாக மருத்துவ நிபுணர் சுப்பிரமணியன் கூறியதாவது:-

    2020 மார்ச் மாதத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் போல பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்க வேண்டும். தற்போது ஒருவரிடம் இருந்து ஒருவருக்கு அதிகமாக தொற்றுவதற்கு கட்டுப்பாடின்மை ஒரு முக்கியமான காரணம் ஆகும்.

    கொரோனா வைரஸ்

    வீட்டில் யாருக்காவது ஒருவருக்கு நோய் தொற்று இருந்தால் அந்த வீட்டில் அனைவருக்குமே தொற்றிவிடுகிறது. எனவே வீட்டில் தனிமை படுத்துவது கூட ஆபத்தானதாகவே உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மேலும் அவர் கூறும் போது, ‘இளைஞர்கள், கர்ப்பிணி பெண்கள் இந்த தடவை பாதிக்கப்படுவது மிக அதிகமாக இருக்கிறது’ என்றார்.

    மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘இப்போது ஒரு நபருக்கு தொற்று ஏற்பட்டால் அவர் 6 பேருக்கு பரப்பிவிடுகிறார். கடந்த ஆண்டு நோய் தொற்று ஏற்பட்ட காலத்தில் ஒருவரை பாதித்து இருந்தாலும் அவரால் மற்றவருக்கு பரவுவது குறைவாகவே இருந்தது.

    அவருடன் தொடர்பில் இருந்தவர்களை பரிசோதித்தால் நெகட்டிவ் என்றே பெரும்பாலான சோதனை முடிவுகள் வந்தன. ஆனால் இப்போது நிறைய பேருக்கு பாசிட்டிவ் என்று சோதனை முடிவுகள் வருகின்றன.

    தற்போது உள்ளாட்சி அமைப்புகள் மூலமாக 12,600 படுக்கைகள் தயாராக உள்ளன. இதன் எண்ணிக்கை 20 ஆயிரமாக உயர்த்தப்பட இருக்கிறது. ஆனால் நோய் பரவலின் வேகத்தை பார்க்கும் போது இவை போதாது என தோன்றுகிறது.

    Next Story
    ×