search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    மதுரையில் ஒரே நாளில் 276 பேருக்கு கொரோனா

    தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. மேலும், இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு என்ற புதிய கட்டுப்பாடுகளை நேற்று அறிவித்துள்ளது.
    மதுரை:

    தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கடந்த ஆண்டு இருந்ததை போல் தற்போது அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 10 ஆயிரத்திற்கும் அதிகமான நபர்கள் கொரோனா நோய் தோற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. மேலும், இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு என்ற புதிய கட்டுப்பாடுகளை நேற்று அறிவித்துள்ளது.

    மதுரையை பொறுத்தமட்டிலும் கொரோனா பாதிப்பு கடந்த 20 தினங்களாக படிப்படியாக உயர்ந்து வருகிறது. அதில் உச்சக்கட்டமாக நேற்று ஒரே நாளில் 276 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. நேற்று 3 ஆயிரத்து 101 பேருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் தான் 276 பேருக்கு நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் 180 பேர் நகர் பகுதியை சேர்ந்தவர்கள். மீதமுள்ளவர்கள் புறநகர் பகுதியை சேர்ந்தவர்கள். மதுரையில் இதுவரை நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் 24 ஆயிரத்து 560 ஆக உயர்ந்துள்ளது. இதுபோல், நேற்று 130 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர். இவர்களில் 110 பேர் நகர் பகுதியைச் சேர்ந்தவர்கள். இதன் மூலம், இதுவரை 22 ஆயித்து 72 பேர் குணம் அடைந்து வீட்டிற்கு சென்றிருக்கிறார்கள். சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது. நேற்றைய நிலவரப்படி சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 2010 ஆக உயர்ந்துள்ளது.

    மதுரை தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த 78 வயது முதியவர், 47 வயது ஆண் ஆகியோர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தனர். இதன் மூலம் மதுரையில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 478 ஆக உயர்ந்துள்ளது.

    மதுரையில் கொரோனா தடுப்பூசி போடும் நபர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது. அதன்படி, நேற்று ஒரே நாளில் 757 பேர் மட்டுமே தடுப்பூசி போட்டுக்கொண்டனர். இதன் மூலம் மதுரையில் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 83 ஆயிரத்து 943 ஆக உயர்ந்துள்ளது. இதுபோல், அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் 1100, அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களில் 110, மாவட்ட சுகாதார கிடங்கில் 4000 என மொத்தம் 5200 தடுப்பூசி கையிருப்பு இருப்பதாக மாவட்ட சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

    மதுரையில் பாதிப்பு அதிகரித்து வருவதால் கொரோனா பரிசோதனையும் அதிக அளவில் செய்யப்படுகிறது. அதன்படி மதுரையில் நேற்றைய நிலவரப்படி, 9 லட்சத்து 2 ஆயிரம் பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமானவர்கள் கொரோனா பரிசோதனைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு வந்து செல்கின்றனர்.

    மதுரையில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட 2010 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் 679 பேர் அரசு ஆஸ்பத்திரிகளிலும், 89 பேர் கண்காணிப்பு மையங்களிலும், 729 பேர் வீட்டு தனிமைப்படுத்துதலிலும், மீதமுள்ளவர்கள் தனியார் ஆஸ்பத்திரிகளிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுபோல், வெளிமாவட்டத்தை சேர்ந்த 186 பேரும் மதுரையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    Next Story
    ×