search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பள்ளப்பட்டியில் கொரோனாவிற்கான சிறப்பு மருத்துவ முகாம் நடந்தபோது எடுத்த படம்.
    X
    பள்ளப்பட்டியில் கொரோனாவிற்கான சிறப்பு மருத்துவ முகாம் நடந்தபோது எடுத்த படம்.

    மாவட்டம் முழுவதும் கொரோனா தொற்று தடுப்பு பணிகள் தீவிரம்

    கரூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று 2-வது அலை பரவலில் இருந்து பொதுமக்களை பாதுகாக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் தீவிரமாக எடுக்கப்பட்டு வருகின்றது.
    கரூர்:

    கரூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று 2-வது அலை பரவலில் இருந்து பொதுமக்களை பாதுகாக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் தீவிரமாக எடுக்கப்பட்டு வருகின்றது. இதில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை பாதுகாப்பாக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. மேலும், தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் வீடு மற்றும் சுற்றியுள்ள பகுதி முழுவதும் கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்யப்படுகின்றது.

    அப்பகுதிகளில் சிறப்பு மருத்துவ முகாம்கள் தினந்தோறும் நடத்தப்பட்டு சளி, இருமல் மற்றும் காய்ச்சல் யாருக்கேனும் உள்ளதா? என கண்டறியப்பட்டு அவர்களுக்கு உடனடியாக கொரோனா தொற்றுப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அதுமட்டுமல்லாது, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் யார் யாருடன் தொடர்பில் இருந்தார்கள் என்ற விவரங்கள் சேகரிக்கப்பட்டு அவர்களுக்கும் கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டு தொற்றுப்பரவலை கட்டுப்படுத்துவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

    கடந்த மார்ச் மாதம் முதல் தற்போது வரை மட்டும் 1,411 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது. 1 லட்சத்து 38 ஆயிரத்து 673 பேருக்கு மருத்துவப்பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா தொற்றுக்கான அறிகுறிகள் இருந்து பரிசோதனையில் தொற்று இல்லை என்று கண்டறியப்பட்ட 38 பேர் அறிகுறிகள் நீங்கும் வரை சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. மேலும் கொரோனாவிற்கு சிகிச்சை அளிக்க 1000 படுக்கைகளுடன் சிறப்பு வார்டுகள் தயார் செய்யப்பட்டு வருகிறது.

    இதேபோல் கரூர் நகராட்சிகள், ஊராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் உள்ள குடியிருப்புப் பகுதிகளில் சிறப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் சத்து மாத்திரைகள் வழங்கப்படுகின்றன. கரூர் நகராட்சிக்குட்பட்ட வேலுச்சாமிபுரம், திண்ணப்பா தியேட்டர் கார்னர், எம்.ஜி.ஆர் சிலை அருகில், ஜந்துரோடு, காமராஜ் மார்க்கெட் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தினந்தோறும் பொதுமக்களுக்கு கபசுரக்குடிநீர் வழங்கப்பட்டு வருகின்றது.

    மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கொரோனா தொற்றுப் பரவலை கட்டுப்படுத்த பல்வேறு தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது.எனவே, நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து பொதுமக்கள் அனைவரும் கொரோனா தொற்றுப் பரவலை கட்டுப்படுத்த அரசின் வழிகாட்டி நெறிமுறைகளை முறையாகப் பின்பற்ற வேண்டும் என மாவட்ட நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.
    Next Story
    ×