search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குளத்தூர் பகுதியில் பெண் ஒருவர் பதநீரை காய்ச்சி கருப்பட்டி தயாரிப்பதை காணலாம்
    X
    குளத்தூர் பகுதியில் பெண் ஒருவர் பதநீரை காய்ச்சி கருப்பட்டி தயாரிப்பதை காணலாம்

    பனம் பாலையில் பதநீர் சுரப்பு குறைந்தது- கருப்பட்டி உற்பத்தி பாதிப்பு

    தூத்துக்குடி மாவட்டத்தில் பனம் பாலையில் பதநீர் சுரப்பு குறைவாக இருப்பதால், கருப்பட்டி உற்பத்தியும் பாதிக்கப்பட்டு உள்ளதாக, பனை தொழிலாளர்கள் வேதனை தெரிவித்தனர்.
    தூத்துக்குடி:

    உச்சி முதல் வேர் வரை அனைத்து பாகங்களும் பலன் தரக்கூடியது என்பதால் பனை மரத்தை பூலோகத்தின் கற்பகத்தரு என்று அழைக்கிறார்கள். தமிழகத்தில் தூததுக்குடி, ராமநாதபுரம், விருதுநகர் மாவட்டங்களில் பரவலாகவும், நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் குறிப்பிட்ட சில பகுதிகளிலும் பனை மரங்கள் உள்ளன. பனை மரத்தில் இருந்து கிடைக்கும் பதநீர் இனிப்பு மிகுந்த பானம் ஆகும். பனைமரங்களில் உள்ள பாலையை சீவி, அதில் இருந்து சுரக்கும் திரவம் பதநீர் ஆகும். இந்த பதநீரை காய்ச்சி கருப்பட்டி தயாரிக்கப்படுகிறது.

    ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை பதநீர் இறக்கப்பட்டு வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் பெரியசாமிபுரம், சுப்பிரமணியபுரம், குளத்தூர், கோரம்பள்ளம் உள்ளிட்ட கிராமங்களில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பனைமரங்கள் உள்ளன. இந்த ஆண்டு பனை மரங்களில் பாலைகள் நன்கு வந்து உள்ளன. ஆனால் அதனை சீவி பதநீர் இறக்குவதற்கு தயார்படுத்தினாலும், குறைந்த அளவு பதநீரே கிடைப்பதாக தொழிலாளர்கள் கவலை தெரிவித்து வருகின்றனர். இதனால் கருப்பட்டி உற்பத்தியும் முழுவீச்சில் நடைபெறவில்லை.

    இது குறித்து பனை தொழிலாளர்கள் கூறும் போது, பதநீர் சீசன் தொடங்கி ஒரு மாதத்துக்கு மேலாகியும் தற்போது வரை போதுமான வருவாய் கிடைக்கவில்லை. பனை மரங்களில் அதிக அளவில் பாலைகள் வந்து உள்ளன. ஆனால் அந்த பாலைகளில் இருந்து பதநீர் சுரப்பு குறைவாகவே உள்ளது. இதனால் எதிர்பார்த்த அளவுக்கு பதநீர் கிடைக்கவில்லை. இன்னும் நாட்கள் செல்ல செல்ல பதநீர் சுரப்பு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கிறோம். இந்த பனை தொழில் 6 மாதங்கள் மட்டுமே நடைபெறும். மீதம் உள்ள 6 மாதங்கள் பனை தொழிலாளர்கள் வேலையின்றி தவித்து வருகின்றனர். இந்த பனைத் தொழிலாளர்களுக்கு வேலை இல்லாத காலங்களில் அரசு ரூ.6 ஆயிரம் நிவாரண உதவி வழங்க வேண்டும் என்று கூறினர்.
    Next Story
    ×