search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உதேஷ்ராஜ்
    X
    உதேஷ்ராஜ்

    நெல்லையில் அரசு ஆஸ்பத்திரியில் இருந்து கைதி தப்பி ஓட்டம்

    நெல்லையில் இன்று அதிகாலை அரசு ஆஸ்பத்திரியில் இருந்து தப்பி ஓடிய கைதியை 7 மணி நேரத்தில் போலீசார் மடக்கி பிடித்தனர்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் பாளை மனக்காவலம் பிள்ளை நகரை சேர்ந்தவர் ஆனந்த். இவரது மகன் உதேஷ்ராஜ்(வயது 19). இவர் வேலைக்கு செல்லாமல் அப்பகுதியில் உள்ள தனது நண்பர்களுடன் சுற்றித் திரிந்து வந்துள்ளார்.

    கடந்த சில நாட்களுக்கு முன்னர் உதேஷ்ராஜ் மற்றும் அவரது நண்பர்கள் மோட்டார் சைக்கிள் ஒன்றை திருடி உள்ளனர். அதனை உதேஷ்ராஜின் நண்பர் ஒருவர் சக நண்பர்களுக்கு தெரியாமல் எடுத்து சென்று விட்டதாக கூறப்படுகிறது.

    இதில் ஏற்பட்ட தகராறில் உதேஷ்ராஜ் மற்றும் அவரது நண்பர்கள் கடந்த 15-ந்தேதி காலை பாளைகோர்ட்டு அருகில் கல்லூரி மாணவர் பிரீத்தம் (21) என்பவரை கடத்தி சென்று ரெட்டியார் பட்டி பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் அடைத்து வைத்துள்ளார்.

    பின்னர் இரவு உதேஷ்ராஜ் மற்றும் அவரது நண்பர்கள் மது குடித்துவிட்டு தூங்கி விட்டனர். அப்போது அடைத்து வைக்கப்பட்டு இருந்த மாணவர் அங்கிருந்த செல்போன் மூலம் பெருமாள்புரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

    தனிப்படை போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அடைத்து வைக்கப்பட்டிருந்த அந்த வாலிபரை மீட்டனர். மேலும் உதேஷ்ராஜையும் கைது செய்து பாளை மத்திய சிறையில் அடைத்தனர்.

    இந்நிலையில் அன்று காலையே உதேஷ்ராஜ் தனக்கு நெஞ்சு வலிப்பதாக சிறை காவலரிடம் தெரிவித்தார். இதுகுறித்து ஜெயில் சூப்பிரண்டிடம் போலீசார் தகவல் தெரிவித்தனர்.

    உடனே அவர் மருத்துவ மனைக்கு அழைத்து செல்ல உத்தரவிட்டார். அதன் பேரில் போலீஸ் பாதுகாப்புடன் உதேஷ்ராஜ் நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று அதிகாலை 3.30 மணி அளவில் அங்கிருந்து போலீசாருக்கு தெரியாமல் தப்பி ஓடி விட்டார்.

    இதுகுறித்து பாதுகாப்பு போலீசார் ஐகிரவுண்டு போலீசில் புகார் அளித்தனர். அவர்கள் உதேஷ்ராஜை தேடி வந்த நிலையில் சாந்தி நகர் பகுதியில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது.

    உடனடியாக அங்கு சென்ற போலீசார் வேலிக்குள் பதுங்கி இருந்த உதேஷ்ராஜை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.

    தப்பி ஓடிய 7 மணி நேரத்தில் அவரை போலீசார் பிடித்துள்ளனர். அவரை ஜெயிலில் அடைப்பதற்கான நடவடிக்கைகளை போலீசார் மேற்கொண்டுள்ளனர்.

    Next Story
    ×