search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சாலை மறியல்
    X
    சாலை மறியல்

    கோவில் பூசாரி கொலையில் 6 பேர் கும்பலுக்கு வலைவீச்சு- உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்

    சீவலப்பேரி கோவில் பூசாரி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    நெல்லை:

    பாளை அருகே உள்ள சீவலப்பேரியைச் சேர்ந்தவர் துரை என்ற சிதம்பரம் (வயது 45). இவர் சீவலப்பேரி சுடலை கோவில் பூசாரியாக இருந்தார்.

    இந்த கோவிலை நிர்வகிப்பது தொடர்பாக அந்த பகுதியைச் சேர்ந்த 2 தரப்பினருக்கு தகராறு இருந்து வந்தது.

    இதுதொடர்பாக நேற்று இரவு கோவில் பூஜை நடந்து முடிந்ததும் சிதம்பரம் தரப்பைச் சேர்ந்தவர்களும் எதிர் தரப்பைச் சேர்ந்த சிலரும் சமரச பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர்.

    அப்போது 2 தரப்பினக்கும் திடீர் என்று மோதல் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த ஒரு தரப்பினர் அரிவாளால், சிதம்பரத்தை வெட்ட முயன்றனர். அவர் உயிர் தப்பி அலறியபடி ஓடினார். ஆனால் அந்த கும்பல் அவரை ஓடஓட விரட்டி சரமாரியாக அரிவாளால் வெட்டியது. இதில் சிதம்பரம் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியானார்.

    அப்போது சிதம்பரத்தின் உறவினர் நடராஜபெருமாள், வெட்ட விடாமல் தடுத்தார். இதில் அந்த கும்பல் நடராஜ பெருமாளையும் சரமாரியாக வெட்டியது. அதற்குள் அந்தப்பகுதியைச் சேர்ந்தவர்கள் ஓடி வந்ததால், அந்த கும்பல் தப்பி ஓடிவிட்டது. படுகாயத்துடன் உயிருக்கு போராடிய நடராஜபெருமாளை அவர்கள் மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர் அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    சம்பவ இடத்துக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன், துணை போலீஸ் சூப்பிரண்டு அர்ச்சனா மற்றும் சீவலப்பேரி இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) பெருமாள் மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். சிதம்பரத்தின் உடலையும் போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்

    போலீஸ் விசாரணையில் கொலைக்கான காரணம் தெரியவந்தது. அதன் விபரம் வருமாறு:

    சீவலப்பேரி சுடலை கோவில் பரம்பரை பூசாரியான சிதம்பரம் நிர்வகித்து வந்தார். அவரது தரப்பினருக்கு கோவில் உள்பகுதியில் உள்ள வருமானமும், கோவில் வெளிப்புறம் உள்ள இடத்தில் இருந்து வரும் வருமானம் மற்றொரு தரப்பினரும் நிர்வகித்து வந்தனர்.

    சமீபத்தில் சுடலை கோவிலுக்கு காம்பவுண்டு சுவர் கட்டப்பட்டது. வெளிப்புரம் சிதம்பரம் தரப்பினர் சார்பாக ஒரு கடை கட்டப்பட்டது. அந்த கடையை எதிர்தரப்பினர் திறக்க கூடாது என்று மூட வைத்து விட்டனர்.

    இதுதொடர்பாக நேற்று இரவு சிதம்பரம் அவரது உறவினர் நடராஜபெருமாள் உள்பட சிலரும், எதிர்தரப்பைச் சேர்ந்த தங்க பாண்டி மற்றும் அவரது ஆதரவாளர்கள் 5 பேர் சேர்ந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது ஆத்திரம் அடைந்த தங்கபாண்டி, அவரது ஆதரவாளர்கள் மகேஷ், பேச்சுகுட்டி உள்பட 6 பேர் சேர்ந்து சிதம்பரத்தை வெட்டிக்கொலை செய்தது தெரியவந்தது.

    இதுதொடர்பாக சீவலப்பேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, தங்க பாண்டி, மகேஷ், பேச்சுகுட்டி உள்பட 6 பேர் கும்பலை தேடி வருகிறார்கள்.

    அவர்களை பிடிக்க இன்ஸ்பெக்டர் பெருமாள் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த தனிப்படை போலீசார்கள் சீவலப்பேரியைச் சேர்ந்த தங்க பாண்டி, மகேஷ், பேச்சுகுட்டி உள்பட 6 பேரை தீவிரமாக தேடி வருகிறார்கள்.

    இந்தநிலையில் சிதம்பரத்தின் உறவினர்களும், ஆதரவாளர்களும் பொட்டல் துரை, செந்தூர் மகாராஜன் ஆகியோர் தலைமையில் ஐகிரவுண்டு ஆஸ்பத்திரி முன்பு திரண்டு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது சிதம்பரம் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை, ரூ.50 லட்சம் நிவாரண உதவி வழங்க வேண்டும் கொலைக்கு காரணமானவர்கள் கைது செய்யப்பட்டு கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தி கோ‌ஷங்கள் எழுப்பினர். திடீரென அவர்கள் அரசு மருத்துவ மனை முன்பு சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதனால் அங்கு போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. அந்த வழியாக வந்த வாகனங்கள் மாற்று வழியில் திருப்பி விடப்பட்டது. சம்பவ இடத்துக்கு கூடுதல் துணைகமி‌ஷனர் பாஸ்கரன் உள்ளிட்ட அதிகாரிகள் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

    சுமார் 30 நிமிடத்திற்கு பின்பு மறியலை கைவிட்ட உறவினர்கள் அரசு மருத்துவ கல்லூரி அருகே அமர்ந்து போராட்டத்தை தொடர்ந்தனர். அப்போது தங்கள் கோரிக்கைகள் நிறைவேறும் வரை அவரது உடலை வாங்கமாட்டோம் என கூறி கோ‌ஷம் எழுப்பி வருகின்றனர்.

    கொலையால் சீவலப்பேரி பகுதியில் மேலும் அசம்பாவித சம்பவங்கள் நிகழாமல் தடுக்கும் வகையில் அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதுதவிர பாளை சுற்று வட்டார பகுதியிலும் போலீசார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டு கண்காணித்து வருகிறார்கள்.

    Next Story
    ×