search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அண்ணா பல்கலைக்கழகம்
    X
    அண்ணா பல்கலைக்கழகம்

    மாணவர்கள் புத்தகத்தை பார்த்து தேர்வு எழுதலாம்- அண்ணா பல்கலைக்கழகம் அனுமதி

    ஆன்லைன் செமஸ்டர் தேர்வின்போது மாணவர்கள் இணையதளத்தை பயன்படுத்தவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
    சென்னை:

    கொரோனா பரவல் காரணமாக மாணவர்களுக்கு ஆன்லைனிலேயே வகுப்புகள் நடத்தப்படுகிறது.

    2-வது அலையும் தீவிரமாக இருப்பதால் தொடர்ந்து ஆன்லைன் வகுப்புகள் மற்றும் தேர்வுகள் என்பது உறுதியாகி விட்டது. அதற்கு ஏற்ற வகையில் மாணவர்களை தயார்படுத்த கல்வி நிறுவனங்களும் தயாராகி வருகின்றன.

    அண்ணா பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் 400-க்கும் மேற்பட்ட என்ஜினீயரிங் கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள்.

    ஆன்லைன் செமஸ்டர் தேர்வுகள்

    இவர்களுக்கான செமஸ்டர் தேர்வுகள் அடுத்த மாதம் (மே) நடைபெற உள்ளது. இந்த செமஸ்டர் தேர்வை ஆன்லைனில் புதுமுறையில் நடத்த அண்ணா பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது.

    தேர்வை எதிர்கொள்ளும் மாணவர்கள் நேரடியாக கேள்விகளை புரிந்துகொண்டு அதற்கான விடைகளை எழுதும் வகையில் தேர்வுக்கான வினாக்கள் இருக்கும்.

    அதே நேரம் போட்டித்தேர்வுகளை போல் விடைகள் ஒரு வரியில் இருக்காது. விரிவான பதில்களை மாணவர்கள் எழுத வேண்டும்.

    கேள்விகளுக்கு தேவையான பதில்களை தேவைப்பட்டால் புத்தகங்களை பார்த்தும், இணைய தளங்களில் தேடியும் மாணவர்கள் எழுதலாம். இந்த புதிய நடைமுறை வருகிற செமஸ்டரில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

    புத்தகங்களை பார்த்து எழுதுவது தானே என்று எளிதாக கருதி விட முடியாது. இந்த மாதிரியான நடைமுறைகள் பல வெளி நாடுகளில் பல ஆண்டுகளுக்கு முன்பே கடைபிடிக்கப்படுகிறது.

    தேர்வு எழுதி முடிக்க குறிப்பிட்ட கால அவகாசம் இருக்கும். அதற்குள் கேள்விகளை படித்து அதற்கான விரிவான பதிலையும் எழுத வேண்டும். ஏற்கனவே புத்தகங்களை நன்றாக படித்து இருந்தால் மட்டுமே சம்பந்தப்பட்ட கேள்விக்கான சந்தேகங்கள் எந்த பக்கத்தில் இருக்கிறது என்பதை எளிதில் புரட்டி பார்த்து விட முடியும்.

    பாடங்களை ஒழுங்காக படிக்காமல் இருந்து விட்டு ஒவ்வொரு கேள்வியாக பார்த்து அதற்கான விடைகளையும் தேடி கண்டுபிடித்து எழுதினால் குறித்த நேரத்துக்குள் பதில் எழுதி விட முடியாது.

    முதல் முறையாக இந்த புதிய முறையிலான தேர்வை என்ஜினீயரிங் மாணவர்கள் இந்த ஆண்டு முதல் முறையாக சந்திக்கப் போகிறார்கள்.
    Next Story
    ×