search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கணேஷ் நகர் பகுதியில் வீடுகளை சுற்றிலும் தேங்கி கிடக்கும் மழைநீரில் பொதுமக்கள் நடந்து சென்றதை காணலாம்.
    X
    கணேஷ் நகர் பகுதியில் வீடுகளை சுற்றிலும் தேங்கி கிடக்கும் மழைநீரில் பொதுமக்கள் நடந்து சென்றதை காணலாம்.

    வீடுகளை சுற்றிலும் தேங்கி கிடக்கும் மழைநீர்: பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம்

    கோவில்பட்டியில் வீடுகளை சுற்றிலும் மழைநீர் தேங்கி கிடப்பதை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    கோவில்பட்டி:

    கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட இலுப்பையூரணி ஊராட்சி பகுதியான ராமையா நகர், திருமால் நகர், கணேஷ் நகர் ஆகிய பகுதிகளில் ஏராளமான வீடுகள் உள்ளன. மழைக்காலங்களில் இந்த பகுதியில் உள்ள வீடுகளை மழைநீருடன் கழிவுநீரும் சேர்ந்து சூழ்ந்து நிற்பது வாடிக்கையாக உள்ளது.

    இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக கோவில்பட்டியில் பெய்த மழை காரணமாக ராமையா நகர், திருமால் நகர், கணேஷ் நகர் பகுதிகளில் மழைநீருடன் கழிவுநீரும் சேர்ந்து குளம் போல் தேங்கி உள்ளது. இதனால் அப்பகுதிகளை சேர்ந்த மக்கள் அந்த தண்ணீர் வழியாக சிரமப்பட்டு செல்ல வேண்டி உள்ளது. மேலும் அப்பகுதியில் சுகாதார கேடு நிலவுவதால், தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது.

    இதனை கண்டித்து நேற்று மாலை கோவில்பட்டி கடலையூர் சாலையில் லாயல்மில் காலனி விலக்கு பகுதியில் அப்பகுதி மக்கள் திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதுகுறித்து அவர்கள் கூறுகையில், “கோவில்பட்டி இலுப்பையூரணி ஊராட்சிக்கு உட்பட்ட ராமையா நகர், திருமால் நகர், கணேஷ் நகர் பகுதிகளில் கடந்த சில ஆண்டுகளாகவே இந்த பிரச்சினை இருந்து வருகிறது. 2 நாட்களாக பெய்த மழையில் சுமார் 2 அடி உயரத்துக்கு வீடுகளை சுற்றிலும் மழைநீருடன் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் நாங்கள் அத்தியாவசிய தேவைக்கு கூட வெளியே செல்ல முடியாத நிலையில் உள்ளோம். இதுகுறித்து அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் பயன் இல்லை. எங்களது வீடுகளை சுற்றிலும் தண்ணீர் தேங்குவதற்கு காரணம் எட்டயபுரம் சாலையில் உள்ள குறிஞ்சாங்குளம் கண்மாயை சரிவர தூர்வாராதது தான். மேலும் கண்மாய் அருகே திட்டங்குளத்துக்கு செல்லும் மறுகால் ஓடையும் புதர் மண்டி காணப்படுகிறது. எனவே இந்த பிரச்சினைக்கு தீர்வு காண குறிஞ்சாங்குளம் கண்மாயை தூர்வாரி, மறுகால் ஓடையை சுத்தம் செய்ய வேண்டும்” என்றனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் கோவில்பட்டி கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கராஜ் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர்.
    Next Story
    ×