search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வானிலை ஆய்வு மையம்
    X
    வானிலை ஆய்வு மையம்

    தென் மாவட்டங்களில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு- வானிலை மையம் தகவல்

    வருகிற 20 மற்றும் 21-ந்தேதிகளில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட பல மாவட்டங்களில் வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    சென்னை:

    சென்னை வானிலை மைய இயக்குனர் புவியரசன் கூறியிருப்பதாவது:-

    கேரளா மற்றும் அதனை ஒட்டிய தென் கிழக்கு அரபிக்கடல் பகுதியில் 2.1 கிலோமீட்டர் உயரத்தில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்றும், நாளையும் மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள், மற்றும் தென் தமிழக (கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் தூத்துக்குடி) மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.

    20, 21-ந்தேதிகளில் மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.

    சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 36 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.

    கோப்புப்படம்

    20, 21-ந்தேதிகளில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிபேட்டை, வேலூர், திருப்பத்தூர், தர்மபுரி, சேலம், நாமக்கல், விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர், பெரம்பலூர், அரியலூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், திருச்சி மற்றும் கரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும்.

    கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக பில்லிமலை எஸ்டேட்டில் (நீலகிரி) 3 செ.மீட்டர் மழை பெய்துள்ளது.

    Next Story
    ×